Friday, July 10, 2009

கபினியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு - தமிழகம் வருகிறது

மைசூர்: கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விரைவில் மேலும் கூடுதல் நீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நீர் இன்னும் ஓரிரு நாளில் தமிழக எல்லையை வந்தடையும்.

வருடா வருடம் ஜூன் மாதம் காவிரிப் பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை.

கர்நாடக அரசும், மழை பெய்தால்தான் தண்ணீர் தருவோம் என்று கூறி விட்டது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து கபினி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருவதால் அணை முழுக் கொள்ளளவை எட்டி வருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 2281 அடியாக இருந்தது. முழுக் கொள்ளளவு 2284 ஆகும்.

இதையடுத்து அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்தில் இது 5000 கன அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. மதியத்திற்கு மேல் 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நேற்று இரவு 7 இந்த அளவு 17 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறந்து விடப்படும் நீர் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுவுக்கு இன்னும் 3 அல்லது நான்கு நாட்களில் வந்து சேரும்.

குடகுப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் சிரமம் இருக்காது என்று தெரிகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் போதிய நீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கிய கர்நாடக அணையான கிருஷ்ணராஜ சாகரில் தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் வருகிற நீரின் அளவு குறைந்துள்ளது. வியாழக்கிழமையன்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று மாலை 12 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது.

தற்போது அணையில் 92.70 அடி நீர் உள்ளது. மொத்தக் கொள்ளளவு 124.8 அடியாகும்.

அதேபோல ஹாரங்கி அணையின் நீர் இருப்பும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்த மூன்று அணைகளும் நிரம்பி உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment