Wednesday, July 15, 2009

ஈழத்தில் இன அழிவிற்கு காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை: திருச்சி "தமிழ்த் தேசிய அரங்கு" மாநாட்டில் வெங்கடராமன்




தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கி பேசும்போது ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று முன்தினம் (12.07.09) நடத்தப்பட்ட ”தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு” சிறப்பாக நடந்தேறியது. தமிழினத்தின் தேசிய எழுச்சியை ஒரு எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஈழ உணர்வாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காலை 9.00 மணியளவில் தொடங்கிய நிகழ்வில் முதலில் இடம்பெற்ற ஓவியப் புகைப்படக் கண்காட்சியில் ஈழத்தமிழர் படும் அவலங்களை காட்சிப்படுத்தும் படங்கள் அரங்கம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியிள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி பேசினார். ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

பின்னர் ”உலகமயமும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் பேசினார். ஈழத்தில் நடந்த இன அழிவிற்கு உலகமய நாடுகள் எப்படி காரணமாக விளங்கின என்பது பற்றியும் உலக நாடுகளின் சதிகள் பற்றியும் அவர் விளக்கினார்.

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்திய கருப்புக்குரல் கலை நிகழ்வு நடைபெற்றது. ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பாடலுடன் தொடங்கிய இந்நாடகத்தில் ஓட்டு அரசியல்வாதிகளின் முகத்திரைக் கிழிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நாடகத்தை திரு. ஐந்து கோவிலான் இயக்கியிருந்தார். வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பார்வையாளர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.

இதன் பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி நடந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “சங்கே முழங்கு” பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.

இந்நிகழ்விற்குப் பின், ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தார்.

இதன் பின்னர், தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு “இப்படிக்கு” இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில், கொலைகாரக் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியை பற்றியும் ஈழத்திற்கு இந்தியத் தேசியம் விளைவித்த தீமைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.

இதன் பின்னர், ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி பேசினார். ”தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்கும் உதவும் கருத்தியல்” என்பதை சாரமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது. “இந்தியமும் ஈழமும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் உரைநல்கினார். இந்தியத்தேசிய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. “ஈழமும் உலகநாடுகளும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்கள் ஈழத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்நிலையை பற்றியும், உலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் அக்கறை கொள்ளாதது பற்றியும் கருத்துரையாற்றினார்.

தமிழக இளைஞர் முன்ணனி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை அவர்கள் தமிழ்த்தேசியமே இனி எதிர்கால வரலாற்றைத் தீர்மானிக்கும் என்று பேசினார். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத் தலைவரும், மார்க்சிய எழுத்தாளருமான தோழர் அமரந்தா ஈழப்பிரச்சினையில் தவறான முடிவெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அது குறித்து நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பேசினார்.

சிறப்புரையாக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் உரையாற்றினார். பின்னர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் தமிழ்த்தேசியம் சாத்தியமே என்ற சாரத்தில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment