Wednesday, December 29, 2010

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் படுகொலை

சிங்கள மொழி தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் மார்க்கண்டு சிவலிங்கம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என இலங்கை இராணுவத்தினரால் வலியுறுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் அந்த வேண்டுகோளை எதிர்த்து மார்க்கண்டு சிவலிங்கம், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை மாணவர்களினால் பாட வைக்க அதி தீவிரமாக செயற்பட்டதாகவும், தேசிய கீதம் குறித்து எதிர்க்கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரால் மார்க்கண்டு சிவலிங்கம் கொள்ளை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் இன்னும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்தவண்ணம் தான் இருக்கின்றது இதற்க்கு இலங்கை அரசு கூறும் இதுபோன்ற பொய்களை யாரும் நம்ப தயாரில்லை . ஆனால் உலக நாடுகள் இதனைவேடிக்கைபார்ப்பது மிகவும் வேதனையான ஒன்று ஐநா என்ற அமைப்பு எந்ததொரு அதிகாரமும்மின்றி இருப்பது மிகவும் கேவலம் .


Saturday, October 16, 2010

அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் நோட்டீஸ்-தமிழகத்தில் பரபரப்பு

சென்னை: மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகர்களில் விநியோகிக்கப்படும் நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தமிழகம் [^] என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் [^] பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் [^] நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை யார் விநியோகிப்பது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த மர்ம நோட்டீஸால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

Friday, August 20, 2010

2வயது ஈழக்குழந்தையின் தலையில் குண்டு துகள்கள்!



சமீபத்தில் எம்.வி.சன்ஸீ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியவர்கள், தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்கள்.

இந்த விசாரணையின் போது 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் போரின் போது வீசப்பட்ட குண்டின் சிறு பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துள்ளார்கள். அதோடு மற்றுமொரு பெண், தனது கணவனின் சிறு நீரகத்தில் ஷெல் துகள்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கூற்றுகள், இந்த அகதிநிலை கோரி நிற்கும் மக்கள், போர் இடம் பெற்ற இடங்களிலோ அல்லது அருகிலோ இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கின்றன.

இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளகொடிய போரின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்ற, மேலே குறிப்பிட்டது போன்ற உண்மைகள், தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற விசாரணையின் போது வெளிப்படலாம் என நம்பப்படுகின்றன




Thursday, July 29, 2010

10 வயதில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் மதுரை சிறுமி சாதனை

மதுரை : பத்து வயதில் "ரெட் ஹாட் இன்ஜினியரிங் சான்றிதழ்-லைனக்ஸ் 5' தேர்வில் வெற்றி பெற்று, மதுரை சிறுமி சாதனை ஏற்படுத்தினார்.


மதுரை சேர்ந்தவர் முனியசாமி; இவரது மனைவி இந்துலேகா. இவர்களது இரண்டாவது மகள் லவிநாஸ்ரீ. தற்போது 10 வயதாகும் லவிநாஸ்ரீ, டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் படிக்கிறார். ஏற்கனவே 8வது வயதில் "மைக்ரோசாப்ட்" சான்றிதழ் தேர்விலும், 9வது வயதில் "மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர்' தேர்விலும் வெற்றி பெற்று, சாதனை படைத்தார்.இப்போது மிக கடினமான "ரெட் ஹாட் இன்ஜினியரிங் சான்றிதழ்' ஆன்-லைன் தேர்விலும் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இவ்வளவு குறைந்த வயதில் உலகில் இத்தேர்வில் வெற்றி பெறுவது இவர் தான்.

Sunday, May 30, 2010

கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' எழுதும் ஒன்றாம் வகுப்பு மாணவி


மேலூர் : மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டரில் சி புரோகிராம் மூலம் கணக்குகள் போட்டு அசத்துகிறார். சி புரோகிராம் என்பது ஓரளவு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே செய்வது. தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் இருந்து இந்த பாடம் நடத்துகின்றனர். கம்ப்யூட்டரை இயக்க தெரிந்து, அடிப்படைகள் தெரிந்த பிறகு "சி புரோகிராம்' பற்றி கம்ப்யூட்டர் கற்று தரும் நிறுவனங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால், மேலூர் மில்கேட்டை சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியின் மகள் சுவேதா(6) இந்த "புரோகிராமில்' அசத்துகிறார். ஆட்டுக்குளம் மகாத்மா காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், பல்வேறு வகை கணக்குகளுக்கு கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' மூலம் தீர்வு காண்கிறார். தீர்வு காணும் விதம் குறித்த எந்த கேள்வி கேட்டாலும் விளக்கி கூறுகிறார்.

Monday, March 1, 2010

மலைப்பாலைவனமாகும் நீலகிரி : சுற்றுச்சூழல்வாதி எச்சரிக்கை

கோவை : ""நீலகிரி மாவட்டத்தில் காடுகளெல்லாம் அழிந்து, கட்டடங்களாகி வருகின்றன. இதே நிலை நீடித்தால், விரைவில் மலைப்பாலைவனமாகி விடும்,'' என, பிரபல சுற்றுச்சூழல்வாதி சவுந்திரராஜன் தெரிவித்தார்.



கோவை "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், "சூழல் சந்திப்பு' நிகழ்ச்சி, தமிழ்நாடு ஓட்டலில் நடந்தது.



நிகழ்ச்சியில், "நீலகிரி-ஒரு வரலாற்றுப்பார்வை' என்ற தலைப்பில் பிரபல சுற்றுச்சூழல்வாதியும், முதுமலை புலிகள் பாதுகாப்பு நிறுவன உறுப்பினருமான சவுந்திரராஜன் பேசியதாவது:நீலகிரியைப் பற்றி சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிட்டிருந்தாலும், அதில் பல கற்பனை விஷயங்களும் அடங்கியிருக்க வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர் காலத்திற்குப் பின்பே, நீலகிரி குறித்த பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப் பட்டன.நீலகிரியின் குளுமையான காலநிலையையும், இயற்கை அழகையும் பல லட்சம் மக்கள் இன்று நேரில் பார்த்து அனுபவிப்பதற்கு ஆங்கிலேயர் செய்த வளர்ச்சிப் பணிகள்தான் காரணம் என்றாலும், இயற்கை அழிவுக்கான தொடக்கமும் அவர்களால்தான் நிகழ்ந்தது.



ஆங்கிலேயர்கள் அவர்களது வசதிக்காக சோலைக்காடுகளையும், புல்வெளிக் காடுகளையும் அழித்து தோட்டம் போட்டனர்; கட்டடங்கள் கட்டினர். அவர்கள் நாட்டின் தாவரங்களை இங்கு வளர்த்தனர். அதனால் பல பயன்கள் இருந்தாலும், பாதிப்புகளே இன்று அதிகமாகியிருக்கிறது. அதிகாரிகள் தங்களது அறிவுக்கும், அதிகாரத்துக்கும் எட்டிய வகையில் பல சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக்களமாக நீலகிரியை மாற்றி விட்டனர். சமவெளிப்பகுதிகளில் மேற்கொள்ளும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நீலகிரியில் நிறைவேற்ற முயற்சிப்பது, மாபெரும் தவறு.காஷ்மீரில் வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் சொத்து வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், நீலகிரியில் காசு இருப்பவர்கள் எல்லாம் சொத்து வாங்கிக் குவிப்பதால் காடுகளெல்லாம் அழிந்து, கட்டடங்களாகி விட்டன.



இதே நிலை நீடித்தால், நீலகிரி விரைவில் மலைப்பாலைவனமாகி விடும்.புவி வெப்பமயமாதலுக்கு சிறந்த உதாரணமாக, நீலகிரியில் கடந்த 40 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி உயர்ந்துள்ளது. சோலைகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு, அதற்கு நேரெதிராக கட்டடங்கள், வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காடுகள் வனத்துறைக்கு சொந்தமானது என்கிற மனோபாவம் விலகி, "காடு நம்முடையது' என்ற எண்ணம் உதித்தால் மட்டுமே அதைக் காக்கிற எண்ணமும் உருவாகும்.



முதுமலையில், "நியூட்ரினோ' திட்டம் கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்த ஒரு சில வன உயிரின ஆராய்ச்சியாளர்களே, அதில் கிடைக்கும் சுயலாபங்களுக்காக அதை ஆதரித்தனர். இத்தகைய திட்டங்களை எதிர்ப்பதால், "வளர்ச்சிக்கு எதிரானவர்களாக' சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாகி வரும் சூழலில், எது வளர்ச்சி என்பதை இன்றைய தலைமுறையினர்தான் தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு, சவுந்திரராஜன் பேசினார்.



சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதற்காக அவருக்கு, "வாழ்நாள் சாதனையாளர்' விருதை "ஓசை' அமைப்பின் சார்பில், "சால்ஜர்' நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி வழங்கினார். ஓசை செயலர் அவை நாயகன் வரவேற்றார்; அமைப்பின் தலைவர் காளிதாசன் நன்றி கூறினார்.