Monday, March 1, 2010

மலைப்பாலைவனமாகும் நீலகிரி : சுற்றுச்சூழல்வாதி எச்சரிக்கை

கோவை : ""நீலகிரி மாவட்டத்தில் காடுகளெல்லாம் அழிந்து, கட்டடங்களாகி வருகின்றன. இதே நிலை நீடித்தால், விரைவில் மலைப்பாலைவனமாகி விடும்,'' என, பிரபல சுற்றுச்சூழல்வாதி சவுந்திரராஜன் தெரிவித்தார்.



கோவை "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், "சூழல் சந்திப்பு' நிகழ்ச்சி, தமிழ்நாடு ஓட்டலில் நடந்தது.



நிகழ்ச்சியில், "நீலகிரி-ஒரு வரலாற்றுப்பார்வை' என்ற தலைப்பில் பிரபல சுற்றுச்சூழல்வாதியும், முதுமலை புலிகள் பாதுகாப்பு நிறுவன உறுப்பினருமான சவுந்திரராஜன் பேசியதாவது:நீலகிரியைப் பற்றி சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிட்டிருந்தாலும், அதில் பல கற்பனை விஷயங்களும் அடங்கியிருக்க வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர் காலத்திற்குப் பின்பே, நீலகிரி குறித்த பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப் பட்டன.நீலகிரியின் குளுமையான காலநிலையையும், இயற்கை அழகையும் பல லட்சம் மக்கள் இன்று நேரில் பார்த்து அனுபவிப்பதற்கு ஆங்கிலேயர் செய்த வளர்ச்சிப் பணிகள்தான் காரணம் என்றாலும், இயற்கை அழிவுக்கான தொடக்கமும் அவர்களால்தான் நிகழ்ந்தது.



ஆங்கிலேயர்கள் அவர்களது வசதிக்காக சோலைக்காடுகளையும், புல்வெளிக் காடுகளையும் அழித்து தோட்டம் போட்டனர்; கட்டடங்கள் கட்டினர். அவர்கள் நாட்டின் தாவரங்களை இங்கு வளர்த்தனர். அதனால் பல பயன்கள் இருந்தாலும், பாதிப்புகளே இன்று அதிகமாகியிருக்கிறது. அதிகாரிகள் தங்களது அறிவுக்கும், அதிகாரத்துக்கும் எட்டிய வகையில் பல சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக்களமாக நீலகிரியை மாற்றி விட்டனர். சமவெளிப்பகுதிகளில் மேற்கொள்ளும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நீலகிரியில் நிறைவேற்ற முயற்சிப்பது, மாபெரும் தவறு.காஷ்மீரில் வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் சொத்து வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், நீலகிரியில் காசு இருப்பவர்கள் எல்லாம் சொத்து வாங்கிக் குவிப்பதால் காடுகளெல்லாம் அழிந்து, கட்டடங்களாகி விட்டன.



இதே நிலை நீடித்தால், நீலகிரி விரைவில் மலைப்பாலைவனமாகி விடும்.புவி வெப்பமயமாதலுக்கு சிறந்த உதாரணமாக, நீலகிரியில் கடந்த 40 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி உயர்ந்துள்ளது. சோலைகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு, அதற்கு நேரெதிராக கட்டடங்கள், வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காடுகள் வனத்துறைக்கு சொந்தமானது என்கிற மனோபாவம் விலகி, "காடு நம்முடையது' என்ற எண்ணம் உதித்தால் மட்டுமே அதைக் காக்கிற எண்ணமும் உருவாகும்.



முதுமலையில், "நியூட்ரினோ' திட்டம் கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்த ஒரு சில வன உயிரின ஆராய்ச்சியாளர்களே, அதில் கிடைக்கும் சுயலாபங்களுக்காக அதை ஆதரித்தனர். இத்தகைய திட்டங்களை எதிர்ப்பதால், "வளர்ச்சிக்கு எதிரானவர்களாக' சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாகி வரும் சூழலில், எது வளர்ச்சி என்பதை இன்றைய தலைமுறையினர்தான் தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு, சவுந்திரராஜன் பேசினார்.



சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதற்காக அவருக்கு, "வாழ்நாள் சாதனையாளர்' விருதை "ஓசை' அமைப்பின் சார்பில், "சால்ஜர்' நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி வழங்கினார். ஓசை செயலர் அவை நாயகன் வரவேற்றார்; அமைப்பின் தலைவர் காளிதாசன் நன்றி கூறினார்.