Tuesday, July 28, 2009

சுவிஸ் பெண்ணை ஏமாற்றிய 'ராஜ வைத்தியர்' விஜய்குமார்!

சென்னை: திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை 'டாக்டர்' விஜயகுமாரிடம் ரூ. 30 லட்சத்தை இழந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் புஷ்ப ரத்தினம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

எனது 14 வயது மகன் ரகுலன் வைரஸ் காய்ச்சலால் மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது. அவனுக்கு சிகிச்சை பெற 2006ம் ஆண்டு சென்னை வந்தேன்.

அப்போது “திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை” என்ற பெயரில் விஜயகுமார் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். அவரை சந்தித்து என் மகனுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து விளக்கி கூறினேன்.

அவர் நோயை குணப்படுத்தி விடுவதாகக் கூறி முதல் கட்டமாக ரூ.15 லட்சம் கேட்டார். நானும் பணத்தை கொடுத்தேன். ஆனால் சிகிச்சையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2வது முறை அவரை சந்தித்தபோது கோழிக் கட்டு சிகிச்சை அளிக்க வேண்டும், அதில் குணமாகி விடும். அந்த சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வேண்டும் என்றார். அந்தப் பணத்தையும் தந்தேன். அந்த சிகிச்சையிலும் மகனுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து 3வது முறையாக டாக்டரை சந்தித்தபோது மான் கறி சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும். அதை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அதையும் நம்பி ரூ.6 லட்சம் கொடுத்தேன். அவர் அளித்த அந்த சிகிச்சையிலும் குணமாகவில்லை. அதன்பிறகு தான் அவரது சிகிச்சையே ஒரு மோசடி என்பது தெரியவந்தது.

என் மகனுக்கு சிகிச்சை அளிப்பதாக ரூ.30 லட்சம் வரை என்னை ஏமாற்றிவிட்டார். இதுபற்றி கடந்த 22ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். இது குறித்து மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி மருத்துவம் செய்த டாக்டர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

யார் இந்த 'டுபாக்கூர்.'..?:

சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் உள்ளது திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலை. ஆயுர்வேத வைத்திய சாலையான இதை டாக்டர் விஜயகுமார் (60) நடத்தி வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவரது குடும்பத்துக்கு ஊருக்கு ஒரு கிளை உண்டு.

1,400 வருடம் பாரம்பரியமாக தனது குடும்பம் வைத்தியம் பார்த்து வருவதாக விளம்பரம் செய்து வரும் இவர் தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம், மான் கறி, புலிக் கறி சிகிச்சை என பல வகையான சிகிச்சைகளை செய்வதாகக் கூறுவார். இவரிடம் போனால் பீஸ் லட்சங்களில் தான்.

சில தனியார் தொலைக்காட்சிகளில் இரவில் பணம் கொடுத்து ஸ்லாட் வாங்கி மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் தன்னைத் தவிர வேறு டாக்டர்கள் அனைவருமே முட்டாள்கள் என்பது போல பேசுவார்.

சமீபத்தில் இவர் மீது புகார்கள் குவிந்ததால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment