Tuesday, July 28, 2009

இலங்கை தூதரை மறித்து பெரியார் தி.க. போராட்டம்

சென்னை: இலங்கை துணைத் தூதர் பி.எம். அம்ஸாவின் காரை தடுத்து நிறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அம்ஸா பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கைப் படையினரின் போரின்போது, இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே பாலம் போல செயல்பட்டார் அம்ஸா. இதைப் பாராட்டும் வகையில் அவரை லண்டன் துணைத் தூதராக மாற்றியுள்ளது இலங்கை அரசு.

இதையடுத்து அவருக்கு ஆந்திர வர்த்தக சபை சார்பில் நேற்று மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அம்ஸா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த காரில் ஏறியபோது அங்கு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காரை வழிமறித்து நிறுத்தினர்.

அம்ஸாவுக்கு எதிராகவும், இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த முற்றுகை நீடித்தது. இதனால் அம்ஸாவால் செல்ல முடியவில்லை.

இதையடுத்து போலீஸாரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், தலையிட்டு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை சமரசப்படுத்த முயன்றனர். ஒரு வழியாக போராட்டத்தை கைவிட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் பின்னர் அங்கிருந்து அகன்றனர்.

இதையடுத்து அம்ஸா அங்கிருந்து பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார். இந்த அமளியில் அம்ஸாவின் கார் லேசாக சேதமடைந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று அம்ஸா கேட்டுக் கொண்டதால் போலீஸார் இந்தப் பிரச்சினையை அத்துடன் விட்டு விட்டனராம்.

No comments:

Post a Comment