Friday, July 10, 2009

தெருவில் திரியும் மனநோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகளை பிடித்து மனநல மருத்துவமனையில் சேர்க்க போலீஸ் டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த அரிமா சங்கத் தலைவர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பது:

தமிழகத்தில் பல பகுதிகளில் மனநோயாளிகள் அனாதைகளாக திரிகிறார்கள். வேதாரண்யம் பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றி திரிகின்றனர். சில சமயங்களில் பொதுமக்கள் மீது கல் வீசுகிறார்கள். இவர்களை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், வெங்கட்ராமன் விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி ஆஜராகி, ‘அண்மையில் கன்னியாகுமரியில் 100க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை போலீசார் பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். அது போல் அனைத்து மாவட்டங்களிலும் தெருக்களில் திரியும் மனநோயாளிகளை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்றார்.

அரசு சார்பாக அரசுப்ளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகி, ‘மனநோயாளிகள் பிரச்னையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கன்னியாகுமரியில் பிடிபட்ட மனநோயாளிகளில் பலர் மனநோயாளி இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வேதாரண்யம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதில் சாலைகளில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மருத்துவ பரிசோதனை செய்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment