Friday, July 31, 2009

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவு

விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.

எனினும் ராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக ராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment