Wednesday, July 8, 2009

ராமநாதபுரம் அருகே ஒரு 'தற்கொலை' கிராமம்!

ராமநாதபுரம்: ஒரு கிராமத்தில் யாராவது தற்கொலை செய்து கொண்டால் அது சாதாரண விஷயம். ஆனால் ஒரு கிராமத்தில் தற்கொலைதான் பெரும்பாலானோரின் வாழ்க்கை முடிவு என்றால் அது வியப்பாக இருக்கிறதல்லவா..

ராமநாதபுரம் அருகே உள்ள வலந்தரவை என்ற கிராமத்தில்தான் தற்கொலைச் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளன. இந்தக் கிராமத்தி்ல் ஒவ்வொரு வீட்டிலும் தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கே உரிய காற்றும், மணல் புழுதியும் நிறைந்த கிராமம்தான் வலந்தரவை.

மணல் படிந்த தெருக்களில் சிறார்கள் விளையாடுகிறார்கள். ஆண்கள் பாய் முடைகிறார்கள். இதுதான் அவர்களது பிழைப்பு. பெண்கள் கூலி வேலைக்குச் செல்கிறார்கள்.

கிராமத்தைப் பார்த்தவுடனேயே இது வறுமைக் கோட்டுக்கு மேலே வர ரொம்ப நாளாகும் என்பது புரியும்.

இத்தனையையும் தாண்டி இக்கிராமத்து மக்களிடம் பேசினால் ஒவ்வொருவரிடமும் ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருப்பது தெரிய வரும் - அது மரண பயம்.

இக்கிராமத்து மக்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வது சாதாரணமாக இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இக்கிராமத்தைச் சேர்ந்த 70 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிர் நீத்துள்ளனர். அதாவது வருடத்திற்கு 14 பேர், மாதத்திற்கு ஒருவர் என சராசரியாக உயிரை மாய்த்துள்ளனர்.

இந்த வட்டாரத்தில் இக்கிராமத்தை தற்கொலை கிராமம் என்றுதான் அனைவரும் அழைக்கின்றனர்.

ஏன் தற்கொலை என்பதற்கு உரிய காரணங்கள் இருப்பதில்லை. நினைத்தவுடன் தற்கொலை என்ற அளவில் இந்த கிராமத்தின் அவல நிலை உள்ளது.

இந்த கிராமத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் வழக்கு அசாதாரணமானதாக இருப்பதாக உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.

கடந்த மாதம் இந்தக் கிராமத்தில், மாவட்ட மன நல திட்ட அதிகாரிகளும், மாவட்ட தலைமையிடத்து மருத்துவமனை டாக்டர்களும் அடங்கிய குழு கூட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

அப்போது தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டொழிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரத்திலிருந்து 15 கிலோமீ்ட்டர் தொலைவில் உள்ளது வலந்தரவை கிராமம். 28 கிராமங்களை உள்ளடக்கிய வலந்தரவை பஞ்சாயத்துக்கு உட்பட்டதுதான் இந்தக் கிராமம்.

இங்கு 2000 பேர் வசிக்கிறார்கள். இங்கு ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு இது உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில் 20 பேர் தந்தை அல்லது தாயை தற்கொலை மூலம் இழந்தவர்கள் ஆவர்.

குடும்பச் சண்டைதான் பெரும்பாலான தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிகிறது. சாதாரண சண்டை என்றாலும் கூட உடனே தற்கொலை முடிவை எடுத்து விடுகிறார்களாம் இந்தக் கிராமத்தினர்.

தீக்குளிப்பு, தூக்கில் தொங்குவது, விஷம் சாப்பிடுவது, ஓடும் ரயில் முன் குதித்து விடுவது ஆகிய முறைகளில் இவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.

வறுமையுடன், குடிப் பழக்கமும் இந்தக் கொடுமை நீடிக்க முக்கிய காரணம் என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இதை முழுமையாக ஏற்க முடியவில்லை. காரணம், பக்கத்து கிராமங்களிலும் இதே பிரச்சினை உள்ளது. ஆனால் அங்கெல்லாம் தற்கொலை என்பது எப்போதாவதுதான் நடக்கிறது.

இக்கிராமத்து மக்கள் மனதளவில் பலவீனமானவர்களாக இருப்பதாக கூறுகிறார் அரசு மருத்துவமனை மன நல மருத்துவர் பெரியார் லெனின்.

இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் மரபு ரீதியான காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம் அதிக அளவில் இருக்கலாம். வலிப்பு நோய் இருக்கலாம். இவையெல்லாம் கூட தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளாகும் என்கிறார் லெனின்.

பஞ்சாயத்து கவுன்சிலர் செல்வம் என்பவர் கூறுகையில், எங்கள் ஊர் மக்கள் சட்டென்று கோபப்பட்டு விடுவார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இதனால்தான் தற்கொலைச் சம்பவங்கள் அதிகம் உள்ளன. அவர்களுக்கு மன நல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டால் இந்த நிலை மாறலாம் என்கிறார்.

நிச்சயம் இந்தக் கிராமத்தை அரசு ஆய்வு செய்து, இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்கள் மனதளவில் ஆரோக்கியம் மிக்கவர்களாக மாற்றத் தேவையான நடவடிக்கைளை செய்ய வேண்டியது அவசர அவசியம் ஆகும்.

No comments:

Post a Comment