Wednesday, July 15, 2009

இலங்கை தமிழரின் நிலை என்.ராம், சோ, ஜெ. போன்றோருக்கு புரியாது: திருமாவளவன்



இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனுக்கு செங்கல்பட்டில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நம் தமிழ் இனம் ஒடுக்கப்பட்டது. அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம் குமுறுகிறது. தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்களாக நாம் இருந்தும் கையாலாகமல், கை கட்டி வேடிக்கை பார்க்கும் கும்பலாக இருக்கின்றோம்.

ஈழத்தில் கடந்த 5 மாதங்களில் சொல்ல முடியாத சொற்களாலும், விமர்சிக்க முடியாத இன அழிப்பை ராஜபக்ச அரசு செய்துள்ளது. யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தோமோ அவர்களே தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறார்கள்.

நாம் விளம்பரத்திற்காக போராடவில்லை. உள்ளத்தில் ஏற்பட்ட காயம், கொந்தளிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.

எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தும் ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நாளாவது குரல் கொடுத்ததுண்டா? தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் போர் முடிவுபெறவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆயுதம் ஏந்தா விடுதலைப் புலிகள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

No comments:

Post a Comment