Monday, July 13, 2009

செஞ்சிலுவை சங்கம் தமிழர்களுக்கு செய்யும் பணியை தடுக்க கூடாது: இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

இலங்கையில் போரின் போது செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களுக்குள்ளேயே இருந்து தேவையான உதவிகளை செய்தனர். இப்போதும் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர். ஆனால் இலங்கை அரசு செஞ்சிலுவை சங்கத்தினருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதில் பணிகளை குறைத்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டுள்ள பணிகளை மட்டுப்படுத்துமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து செஞ்சிலுவை சங்கம் தன்னுடைய பணிகளை குறைக்க பரிசீலனை செய்து வருகிறது.

மோதல் காலப்பகுதியிலும், மோதலுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளின் முக்கியத்துவம் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்த வரையில் மரபு ரீதியான மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இதன் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. குறிப்பாக இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து முக்கியமானதாக இருப்பதால் செஞ்சிலுவை சங்கம் தொடர்ந்து இருப்பது அவசியமானதாகி உள்ளது.

மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்தும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துடன் பேச்சுக்களை நடத்துமாறு இலங்கை அரசை நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment