Wednesday, July 15, 2009

14 மாவட்டங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கரூர் அருகே ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரிசீவிங் டெர்மினலுக்கு கொச்சியில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் எரிபொருட்களை ஏற்றிச்செல்கின்றன.

இந்நிலையில், கூலி உயர்வு கேட்டு டேங்கர் லாரி டிரைவர், கிளீனர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக பெட்ரோல், டீசல் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. குடோனிலும் சாலையிலும் வரிசையாக நூற்றுக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதுபற்றி டேங்கர் லாரி ஓட்டுனர், கிளீனர் சங்க துணை செயலாளர் ஜெயமுருகன் கூறுகையில், டேங்கர் லாரி டிரைவர்களுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.13 கூலி மற்றும் படி அளிக்கப்படுகிறது. மாதம் ரூ.5ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. சாப்பாடு செலவே ஒரு நாளைக்கு ரூ.100 ஆகிறது. தொலைதூர மாவட்டங்களுக்கு சென்று வர 3 நாட்களுக்கு மேலாகி விடும். எனவே சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்றார்.

இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதற்கிடையே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள், டேங்கர் லாரி டிரைவர்களை இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஸ்டிரைக் தொடரும் என கூறப்படுகிறது. ஸ்டிரைக் நீடித்தால் 14 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

No comments:

Post a Comment