Monday, July 13, 2009

யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் அமைதியாக வாழமுடியாத நிலைமை: தமிழகம் சென்ற அகதிகள் விபரிப்பு

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும், இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை என்றும், வவுனியாவில் முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் தமிழ்மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் வந்த இலங்கை தமிழரொருவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் அடம்பனைச் சேர்ந்த மணிவண்ணன் (35 வயது), அவருடைய மனைவி ரெஜினா (30 வயது), அவருடைய பிள்ளைகள் சுடர் (5 வயது), முகிலன் ஆகியோர் சனிக்கிழமை அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு கருத்துத் தெரிவித்த மணிவண்ணன் மன்னாருக்கு அருகில் கொக்காலை என்ற இடத்தில் தமது வீட்டில் இருந்தவேளை ரொக்கெட் தாக்குதலால் தான் காயமடைந்ததாக தெரிவித்திருக்கிறார். அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் நடக்க முடியவில்லை. ஆயினும், மாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள போதிலும், போதிய மருந்துகள் இல்லாமையினால் அவர் முடமாகிவிட்டார்.

தொற்றுநோய்கள் பரவுவதால் இலங்கையின் அகதி முகாம்களில் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதாகவும் வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் ஆண்களும் பெண்களும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டது எனினும் தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். வவுனியாவில் முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் அகதிகள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரானது சுகாதார குறைபாடுடன் இருப்பதாகவும் இந்த நிலைமையில் பல அகதிகள் வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் மற்றும் பல நோய்களால் பீடிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அங்கு புதிய முறை மருத்துவச் சிகிச்சை இல்லாததால் சிறுவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முகாம்களிலுள்ள குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாக இருப்பதாக மணிவண்ணன் கூறியதாக "எக்ஸ்பிரஸ்' செய்திச்சேவை நேற்று தெரிவித்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மணிவண்ணனின் குடும்பம் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு அகதி ஒருவர் தனியாளாக வந்துள்ளார். ஜெயராஜ் (55 வயது) என்ற இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர். தனது 20 கிராம் தங்கச் சங்கிலியை அடகுக்காரர்களிடம் கொடுத்து மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது மனைவியும் இரு பிள்ளைகளும் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அதனால் இந்தியாவிற்கு வருவதென தான் முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment