Sunday, July 12, 2009

ஆக. 9ம் தேதி பெங்களூரில் வள்ளுவர், 13ல் சென்னையில் சர்வஞ்னர் சிலைகள் திறப்பு


பெங்களூர்: பெரும்புலவர் திருவள்ளுவரின் சிலை மற்றும் கன்னடக் கவிஞர் சர்வஞ்னர் ஆகியோரின் சிலைகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் 9ம் தேதி வள்ளுவர் சிலையும், 13ம் தேதி சென்னையில் சர்வஞ்னர் சிலையும் திறக்கப்படவுள்ளன.

பெங்களூர் அல்சூரில் ஏரிக்கரையோரம், பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 1991ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சிலையைத் திறக்கும் நேரத்தில் கன்னட அமைப்புகள் பெரும் போராட்டத்தில் குதித்ததால் சிலை திறப்பு நின்று போனது. பின்னர் சிலையை சாக்கைக் கொண்டு மூடி வைத்தனர். இன்று வரை அதே நிலையில்தான் உள்ளது திருவள்ளுவர் சிலை.

கடந்த 18 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வள்ளுவர் சிலைக்கு விடிவு காணும் வகையில் கன்னடக் கவிஞரான சர்வஞ்னரின் சிலையை சென்னையில் நிர்மானிக்க அனுமதி தருவது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி அயனாவரத்தில் உள்ள கன்னட சங்க வளாகத்தில் இந்த சிலை நிறுவப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் சென்னை வந்திருந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து இதுகுறித்து விவாதித்தார். அப்போது வள்ளுவர் சிலைத் திறப்புக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். திறப்பு விழாவுக்கு தேதியும் கேட்டு விட்டுச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் கருணாநிதி, எதியூரப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஆகஸ்ட் 9ம் தேதியன்று வள்ளுவர் சிலைத் திறப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

மேலும், ஆகஸ்ட் 10 அல்லது 13ம் தேதி சென்னையில் சர்வஞ்னர் சிலைத் திறப்பை வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆகஸ்ட் 9ம் தேதி வள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. 13ம் தேதி சர்வஞ்னர் சிலை சென்னையில் திறக்கப்படும் என எதியூரப்பாவின் செயலாளர் பிங்கேஷ் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களாக சாக்குப் பையில் முடங்கிப் போயிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிலைக்கு விடிவு பிறந்துள்ளது.

No comments:

Post a Comment