Wednesday, July 15, 2009

கிடுகிடுவென உயரும் பருப்பு-காய்கறி விலை!

சென்னை: இதுக்கு தங்கம் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு துவரம் பருப்பு, பயறு வகைகள், காய்கறிகளின் விலை படு வேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை, எளியவர்கள் எப்படி சமைப்பது, சாப்பிடுவது என்று பீதியில் மூழ்கியுள்ளனர்.

சமீப காலமாக பருப்பு, பயறு வகைகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு ரேட்டில் விற்கின்றன இந்த அத்தியாவசியப் பொருட்கள்.

குறிப்பாக சாம்பார் வைக்க முக்கியமான துவரம் பருப்பு கடுமையான விலை உயர்வைக் கண்டுள்ளது.

துவரம் பருப்பு விளைச்சலில் முன்னணி மாநிலங்களான மராட்டியம், குஜராத், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மிகவும் குறைந்து விட்டது. இதனால் அந்த மாநிலங்களில் துவரம் பருப்பு விளைச்சல் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகம் மாநிலங்களில் துவரம் பருப்பு விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய துவரம் பருப்பின் அளவு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு தினமும் 500 லாரிகளில் துவரம் பருப்பு வந்து கொண்டிருந்த நிலை மாறி தற்போது 100 லாரிகள் மட்டுமே வருகிறது.

இந்தத் துயரம் போதாதென்று சமீபத்தில் டீசல் விலையையும் உயர்த்தியதால் லாரி வாடகை உயர்ந்து விட்டது. இது இப்போது அப்பாவி மக்களின் தலையில் வந்து விடிந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.65 க்கு விற்பனையானது. தற்போது ரூ.98 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் துவரம் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ.6 கூடி உள்ளது.

பர்மா துவரம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது, தற்போது ரூ.8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.72க்கு விற்பனையான பர்மா துவரம் பருப்பு ரூ.82 ஆக கூடியுள்ளது.

உளுந்து விளையும் ஓவர்..

தமிழ்நாட்டில் உளுத்தம் பருப்பு தேவை ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் உபயோகத்திற்கு அதிகரித்துள்ளது. பர்மா நாட்டை தவிர இந்தியாவில் உளுத்தம் பருப்பு விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் உளுத்தம் பருப்பு விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

100 கிலோ கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டை கடந்த 5 நாட்களுக்கு ரூ.5,800க்கு விற்பனையானது, தற்போது ரூ.7,700 ஆக கூடியுள்ளது. ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.60க்கு விற்பனையானது, தற்போது ரூ.70 ஆக உயர்ந்து விட்டது.

பர்மா உளுத்தம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்து விற்பனையானது ரூ.6 ஆயிரமாக கூடி உள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.52க்கு விற்பனையானது, தற்போது ரூ.62ஆகவும்.

அப்செட்டில் அப்பள வியாபாரிகள்..

உளுத்தம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ள அப்பளம் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

பாசி பருப்பு ஒரு கிலோ ரூ.63 க்கு விற்பனையானது ரூ.68 ஆகவும் அதிகரித்து உள்ளது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலை தாறுமாறாக இருப்பதால் கடலைப் பருப்பின் விலையையும் உயர்த்தி விட்டனர் வியாபாரிகள்.

50 கிலோ கொண்ட மூட்டை மும்பை கடலைப்பருப்பு ரூ.1,500க்கு விற்பனையானது, ரூ.1,800ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ மும்பை கடலைப்பருப்பு 5 நாட்களுக்கு முன்பு ரூ.32க்கு விற்பனையானது ரூ.38ஆகவும், சாதா ரக கடலைப்பருப்பு ஒரு கிலோ ரூ.30 க்கு விற்பனையானது ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுபோதாதென்று மல்லி விலையும் மலைக்க வைக்கிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையான மல்லி ரூ.60 ஆகவும், முதல் ரக புளி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது ரூ.50 ஆகவும், 2-வது ரக புளி ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனையானது ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது.

மொச்சை விலை கிலோ ரூ. 50...

பயிறு வகைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பர்மா மொச்சை கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது தற்போது ரூ.90ஆகவும், காராமணி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது ரூ.75ஆகவும், முழு பாசிப்பயிறு ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனையானது ரூ.50 ஆகவும் கூடி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்து கொண்டிருந்த பூண்டு வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையானது ரூ.70ஆகவும், 2-வது பூண்டு ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது ரூ.50 ஆகவும், குண்டு மிளகாய் வத்தல் முதல் ரகம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையானது ரூ.120 ஆகவும், 2-வது ரகம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது ரூ.100 ஆகவும், நீட்டு மிளகாய் வத்தல் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையானது ரூ.70 ஆகவும் அதிகரித்துள்ளது.

உருளைக் கிழங்கு- சேனை விலையும் ஏறி வருகிறது.

வெள்ளை கொண்டை கடலை ரூ.48-க்கு விற்றது. தற்போது ரூ.54-க்கு விற்கப் படுகிறது.

இதேபோல் நீட்டு மிளகாய் வத்தல் ஒருகிலோ ரூ.60-க்கு விற்பனையானது. இன்று ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

குண்டு மிளகாய் வத்தல் ஒருகிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்ந்து விட்டது. இதில் 2-வது ரக குண்டு வத்தல் ரூ.70-ல் இருந்து ரூ.80 ஆக விற்கப்படுகிறது.

கடுகு கிலோவுக்கு 6 ரூபாய் கூடிவிட்டது. இதேபோல் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு இன்று கிலோ ரூ.45-க்கு விற்பனையாகிறது.

காஸ்ட்லியாகி வரும் காய்கறிகள்..

அதேபோல காய்கறி விலையும் கடுமையாக ஏறி வருகிறது.

கிலோ 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு இன்று 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சேனைக்கிழக்கு கிலோ 5 ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது கிலோ 17 ரூபாய்க்கு விலை ஏறிவிட்டது.

கத்தரிக்காய் ரூ.10, வெண்டை ரூ.15, தக்காளி ரூ.10,
முட்டை கோஸ் ரூ.7, கேரட் -ரூ.25, பீட்ரூட் ரூ.10,
சவ்சவ் ரூ.15, முள்ளங்கி ரூ.10, பீன்ஸ் ரூ.20, அவரை ரூ.20, பூசணிக்காய் ரூ.6, இஞ்சி ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.22, பெரிய வெங்காயம் ரூ.12 என விற்கிறது.

கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் இது. இங்கிருந்து வாங்கிச் சென்று சில்லறைக் கடைகளில் விற்கும்போது விலை இன்னும் கூடுதலாகவே உள்ளது.

இப்படி தாறுமாறாக அத்தனைப் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பெண்கள், இந்த விலை உயர்வைக் கூறி புலம்பி வருவதை காண முடிகிறது.

விலையைக் குறைக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

இதில், விலை மேலும் உயராலம் என்று வியாபாரிகள் கூறுவது வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது.
Tags: tamilnadu, veggies, dal, toor dal, price rise,

No comments:

Post a Comment