Sunday, July 12, 2009

குளுகுளு சீசன் - குற்றாலத்தில் அலைமோதும் மக்கள்

குற்றாலம்: குற்றாலத்தில், சீசன் படு குளுமையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

குற்றாலத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சீசன் கலக்கி வருகிறது. ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் சாரல் பொழிகிறது. நேற்று காலை சுமார் அரை மணி நேரம் பலத்த சாரல் பெய்தது. பிறகு மாலை வரை லேசான வெயில் காணப்பட்டது. மாலையில் மீண்டும் இதமாக சூழல் நிலவியது.

மெயினருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இந்த சீசனில் நேற்று முதன்முறையாக குற்றாலம் குலுங்கின்ற அளவிற்கு சுற்றுலா பயணிகல் கூட்டம் காணப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயினருவில் பெண்கள் இரண்டாவது பாலம், மற்றும் சன்னதி பஜார் வரை அணிவகுத்து நின்றனர். அதிகமான வாகனங்கள் வந்ததால் ஐந்தருவிக்கு செல்ல ஓருவழி பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மெயினருவி கார் பார்கிங் நிறைந்து பேரூராட்சி அலுவலக சாலை, கலைவாணர் கலையரங்கம், தென்காசி தங்கும் விடுதி சாலை போன்றவற்றிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் குண்டாறு நீர்த்தேக்கம், கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாஉருட்டி அருவிகளுக்கு வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

விடுமுறை தினம் என்பதால் கட்டுக்கு அடங்காத அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது. போதிய அளவு வாகன போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் பற்றாக்குறை உள்ளது.

No comments:

Post a Comment