Sunday, July 12, 2009

செட்டிக்குளம் முகாமின் அவலம்: குடிதண்ணீரைப் பெறுவதற்கே 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள்



வவுனியா செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களின் நிலை சிறப்பாக உள்ளது என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றபோதிலும், தண்ணீரைப் பெறுவதற்குக் கூட முகாமில் உள்ளவர்கள் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான வந்தனா சந்திரசேகர் தமது குடும்பத்தினருக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கு மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்ததாக ஆதாரபூர்வமாகச் செய்தியை வெளியிட்டிருக்கும் 'ரைம்ஸ் ஒப் இந்தியா', இந்த நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு குடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் மற்றும் உடைகளைத் தோய்ப்பதற்காகவும் நூறு லீற்றர் நீர் மட்டும் வழங்கப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றது.

சிறிய தொட்டிகளில் கொண்டுவரப்படும் தண்ணீர் இந்த முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு எந்தவகையிலும் போதுமானதாக இருப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டும் 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா', இந்த முகாம்களில் உள்ளவர்களின் வாழ்க்கை அனைத்துக்கும் வரிசையில் காத்திருப்பதிலேயே போய்விடுவதாகவும் குறிப்பிடுகின்றது.

முகாம்களின் நிலைமை தொடர்பாக 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' ஏட்டில் வவுனியாவில் இருந்து ஜெயா மேனன் எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் மேலும் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மருந்துக்காக ஒரு பக்கத்தில் வரிசையில் மக்கள் காத்திருப்பதைக் காணலாம். மருந்துகளைப் பெறுவதற்காக மருந்தகத்தின் முன்பாக மணித்தியால கணக்கில் காத்திருந்தே இவர்களால் மருந்துகளைப் பெற முடிகின்றது.

மறுபுறம் தண்ணீருக்கும் வரிசை. இவை அனைத்தையும்விட மோசமாக மலசல கூடங்களைப் பயன்படுத்துவதற்குக் கூட மணித்தியால கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்படுகின்றது.

காட்டுப்பகுதியாக இருந்த செட்டிகுளம் அவசரம் அவசரமாகச் சுத்திகரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அகதிகளுக்கான முகாம்களாக மாற்றப்பட்டது. இந்த முகாம்களில் உள்ளவர்களின் வாழ்க்கை தண்ணீருக்கான வரிசையில் காத்திருப்பதுடனேயே தொடங்குகின்றது.

மோசமான சுகாதார நிலைமைகள் பல்வேறு நோய்கள் பரவுவதற்கு காரணமாகின்றது. ஆனால், இதற்கான மருந்துகளைப் பெற முடியாத நிலை.

இங்குள்ள சிறுவர்களுக்குப் பாடசாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றுக்குத் தேவையான எந்தவித வசதிகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை. இதனால் இங்குள்ள மாணவர்களின் கல்வி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று நேரத்துக்குமான உணவை வழங்குவதற்காக பொதுவான சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றபோதிலும் இங்குள்ள இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குவது என்பது பெரும் சவாலாகவே இருக்கின்றது.

இந்த முகாம்களுக்குள் இருந்து யாரும் வெளியே செல்வதையோ அல்லது யாராவது உள்ளே வருவதையோ தடுப்பதற்காக இந்த முகாம்கள் முட்கம்பி வேலிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஆயுதம் தாங்கிய படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 600 ஏக்கர் பரப்பில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த முகாம்களுக்குள் செல்வதற்கு அரச சார்பற்ற மற்றும் தொண்டர் நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த முகாம்களின் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம் உள்ளது. அவர்களின் துன்பங்கள் மிகவும் மோசமானதாகும்.

உலகிலேயே இடம்பெயர்ந்தவர்களுக்காக என அமைக்கப்பட்ட முகாம்களில் மிகவும் பாரிய முகாம் இதுதான் என செட்டிக்குளம் முகாமை ஐக்கிய நாடுகள் சபை வர்ணித்திருந்தது.

இந்த முகாமின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கின்றது என அண்மையில் ஓய்வுபெற்ற சிறிலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment