Tuesday, July 21, 2009

விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணத் தொகுதி படையினரால் மீட்பு



தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகவும் சூட்சுமமான முறையில் பாதுகாக்கப்பட்டு வந்த மிக முக்கியமான ஆவணங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின் போது மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பல அரியவகை ஆங்கில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அவையும் விடுதலைப் புலிகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களத்தின் உயரதிகாரியான அநுரா சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பல அரியவகை ஆங்கில நூல்கள் மற்றும் இராணுவ ஆராய்ச்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 270 ஆங்கில நூல்கள், கட்டுரைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பன சீராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனைத் தவிர, இலங்கை இராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய இராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், இராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் எளிமையான தமிழிலில் அச்சிடப்பட்ட ஆவணங்களும் இவற்றில் இருப்பதாக அறியப்படுகின்றது.

இவை மட்டுமன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, மின்கலன்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, மின்கலன்களையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு சிற்றுண்டிப் பெட்டியில் டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் இந்த ஆவணங்களில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த கொள்கலன்களிலிருந்து கடந்த 30 வருடப் போராட்டத்தின் பல முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த இராணுவக் கல்வியை அளித்துள்ளதாக இதன்மூலம் தெரியவருவதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment