Friday, July 10, 2009

ஈழப்பிரச்சனையில் உலக நாடுகள் ஆதரவு கிடைக்காததற்கு மத்திய அரசுதான் காரணம்: பழ.நெடுமாறன்


ஈழத்தமிழர் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் பின்னடைவு ஏற்பட்டதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டைதான் காரணம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.


சென்னையில் தினப்புலரி நாளிதழின் முதன்மை ஆசிரியர் ஜோசப் கென்னடி எழுதிய ‘அநீதியின் காவலர்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய பழ.நெடுமாறன்,

ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட முடியாததே காரணமாகும். இதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டையும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அதன் நிலைப்பாடும் தான் காரணம்.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது. ஆனால், இதில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்கு இந்திய அரசு தான் முட்டுக்கட்டை போட்டது. இந்தியாவின் பிராந்திய நலனுக்கு உட்பட்ட பிரச்சனையாக ஈழத்தமிழர் பிரச்சனையை உலக நாடுகள் கருதுகின்றன. எனவே தான் இந்த பிரச்சனையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிலை யெடுத்தன.

எனவே ஈழத்தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும். அதன் மூலம் தான் இந்த பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட முடியும் என்றார் நெடுமாறன். முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், ‘ஈழத்தமிழர் விடுதலைக்கு எதிராக சீனாவும், கியூபாவும் செயல் பட்டதற்கு நாம் உண்மை நிலைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாததே முக்கிய காரணம் ஆகும்.

இதன் காரணமாக கொலையாளிக்கு ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் நிர்கதியாக விடப்பட்டு உள்ளார்கள். இந்த பிரச்சனையில் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். ஈழ விடுதலைப்போர் இன்னும் முடியவில்லை’ என்றார்.

No comments:

Post a Comment