Thursday, July 9, 2009

இந்திய ஆக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை: தன்ராஜ்பிள்ளை



இந்திய ஆக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் தன்ராஜ்பிள்ளை கூறினார்.

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ்பிள்ளை சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய ஆக்கி அணியை பொறுத்தவரை வெளிநாட்டு பயிற்சியாளர் (தற்போது ஸ்பெயினின் ஜோஸ் பிரேசா உள்ளார்) என்பது தேவையற்ற ஒன்று. இந்தியாவிலேயே திறமையான பயிற்சியாளர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்திய ஆக்கி அணியின் டெக்னிக்கல் ஆலோசகராக இருந்த ரிக் சார்ல்ஸ்வொர்த் திறமைமிக்க நபர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன. ஆனால் அவரது பணி முழுமையாக நமக்கு கிடைக்காமல் போனது வருத்தமானதாகும்.

இந்திய ஆக்கி சம்மேளனத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருந்தது. பிரச்சினைகள் இருந்தாலும் ஆக்கி நல்ல நிலையில் முன்னேற வேண்டும் என்பது தான் எனது எண்ணமாகும். தற்போது ஆக்கி இந்தியா' என்ற பெயரில் ஆக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய அணியின் தோல்விகளுக்கு வீரர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. நம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. நிதி வசதியும் சரியாக இல்லை.

கிரிக்கெட் ஆடும் வீரர்கள் ஒரு போட்டிக்கு ரூ.21/2 லட்சம் கட்டணமாக பெறுகிறார்கள். ஆனால் ஆக்கி வீரர்களுக்கு ஒரு நாளுக்கு 20 டாலர் தான் (சுமார் ஆயிரம் ரூபாய்) கொடுக்கப்படுகிறது. அவர்களின் வருவாயை அதிகப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியில் திலிப்திர்கே 2 ஆண்டுகள் காயத்துடன் விளையாடி இருக்கிறார். ஸ்கேன் பரிசோதனையில் அவர் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது. இந்திய அணிக்காக விளையாடும் போது வீரர்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

இந்திய அணி அடுத்து ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க கூடாது. இந்த போட்டியின் மூலம் அவர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment