Tuesday, July 21, 2009

லஞ்சம்: இந்திய குடியுரிமை அதிகாரி கைது- ரூ. 1 கோடி சிக்கியது

சென்னை: சென்னையில் இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ளது மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் (Ministry of Overseas Indian Affairs) குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம்.

வெளிநாடுகளுக்கு கட்டட வேலை உள்ளிட்ட சிறு பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்ப இங்கு தான் நிறுவனங்கள் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி வழங்குவதில் பெருமளவில் ஊழல் தலைவிரித்தாடி வந்தது.

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறான பல நிறுவனங்களுக்கும் அனுமதி தந்து வருகிறது இந்த நிறுவனம். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றி வருகின்றன.

இதுபோன்ற மோசடியான நிறுவனங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அலுவலகமே லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடிக்கு துணை போய் வருகிறது. இங்கு ஏராளமான லஞ்சம் தலைவிரித்தாடுவதாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில் சிபிஐ களமிறங்கியது.

இந்த அலுவலக அதிகாரியான சேகரை சிபிஐ கண்காணிக்க ஆரம்பி்ததது. ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) அதிகாரியான இவர் சுங்கத்துறையில் பணியாற்றிவிட்டு 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய குடியுரிமை அலுவலக பணிக்கு வந்தவர் ஆவார்.

லஞ்சம் வாங்குவதில் எக்ஸ்பர்ட்டான இவரை பணம் வாங்கும்போது பிடிக்க சிபிஐ முயன்றது. ஆனால், இவர் பிடிபடவி்ல்லை. பணத்தை வெவ்வேறு சேனல்கள் மூலம் வாங்கி சிபிஐ அதிகாரிகள் கண்ணிலேயே மண்ணைத் தூவி வந்தார்.

இதையடு்த்து இவரை வேறு வழியில் மடக்க சிபிஐ திட்டமிட்டது.

இந் நிலையில் சேகர் தனது மகன் மதுவுக்கு அண்ணா பல்கலைக்கழத்தில் பணம் கொடுத்து என்ஜினீயரிங் சீட் வாங்க முயற்சிப்பது தெரியவந்தது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆந்திர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்தவரான ரவீந்திரபாபு என்ற ஏஜென்டிடம் ரூ. 14 லட்சம் பேரம் பேசினார் சேகர்.

இதையடுத்து தனது அலுவலகத்தால் முறைகேடாக பலனடைந்த அன்வர் உசேன் என்ற டிராவல் ஏஜென்டிடம் பேசினார் சேகர். ரூ. 14 லட்சத்தைத் தருமாறு அவர் கூறவே ஒப்புக் கொண்டார் உசேன். இதையும் சிபிஐ மோப்பம் பிடித்தது.

இருவரும் பணத்துடன் ரவீந்திரபாபுவை சந்தி்க்கக் கிளம்பவே சிபிஐ அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்தனர்.

ரவீந்திர பாபுவிடம் ரூ. 14 லட்சத்தை சேகரும் உசனும் தந்தபோது அதிரடியாக உள்ளே புகுந்த சிபிஐ அதிகாரிகள் மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

சோதனையில் அன்வர் உசேன் என்ற புரோக்கரிடம் இருந்து ரூ.13
இதையடுத்து சேகரி்ன் மேற்கு மாம்பலம் வீடு மற்றும் அலுவலகம், ஏஜென்ட் அன்வர் உசேனின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

அப்போது சேகரின் வீட்டில் ரூ. 60 லட்சம் பணம் சிக்கியது. அவரது வங்கிக் கணக்கில் ரூ. 40 லட்சம் இருந்தது. அதை சிபிஐ அதிகாரிகள் முடக்கினர்.

உசேனின் வீட்டில் ரூ. 20 லட்சம் சிக்கியது. இந்த மூவரும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

கைதான அதிகாரி சேகர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர். இவரது மனைவி அம்பிகா வருமான வரித் துறையில் அதிகாரியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment