Thursday, July 16, 2009

தம்மீதான குற்றவியல் விசாரணைகளுக்கு அஞ்சியே அரசாங்கம் முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை:த நியூயோர்க் டைம்ஸ்



அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுவிடும் என சந்தேகத்திலேயே அரசாங்கம் இடைத்தங்கல் முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என த நியூயோர்க் டைமஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழர்களுக்காக பணியாற்றி வருகின்ற சில தொண்டு நிறுவனங்களும், அரசாங்கத்தினால் தாம் வெளியேற்றப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில், முகாம்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொள்வதில்லை எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும், மௌனித்த காலங்கள் போதும் எனவும், தற்போது தமிழ் மக்களின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல் மற்றும் நீண்ட நாட்களாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

விடுதலைப் புலிகளை வெற்றிக் கொண்டு விட்டதாக அறிவித்து 2 மாதங்களை கடந்த நிலையிலும், இன்னும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அதிகரித்த இராணுவத் துருப்பினரின் பாதுகாப்பினால், அவர்களின் நடமாட்ட சுதந்திரம் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களை முகாம்களில் இருந்து வெளியேற விடாத அதேவேளை, மனிதாபிமான நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் ஊடகவியாளர்களையும் முகாம்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றியதன் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மீள குடியமர்த்தப்படுவர் என தெரிவித்து வருகிறது. எனினும், கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது என த டைமஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment