Friday, August 28, 2009

விவசாய பணிகளுக்கு ரோபோ: கோவில்பட்டி மாணவரின் கலக்கல் கண்டுபிடிப்பு

கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விவசாயப் பணிகளுக்கு பயன்படும் வகையில் ரோபோ ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோயிலைச் சேரந்த சித்தன் என்பவரது மகன் ஸ்ரீதர் (18). ஸ்ரீதர் கோவில்பட்டி அருகே சிவகாசி செவல்பட்டியிலுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 3ஆம் ஆண்டு டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்திற்கு தற்போது நலிந்து வருகிறது. வேலையாட்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு விவசாய பணிகளுக்கு பயன்படும் ரோபோவை வடிவமைத்து இருக்கிறார் இந்த கோவில்பட்டி மாணவர். இவர் வடிவமைத்த ரோபோ குறித்த செயல் விளக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கோவில்பட்டி நகராட்சி பூங்காவில் விளக்கி கூறினார்.

சுமார் 3.5 அடி உயரமுள்ள இந்த ரேபோவில் மோட்டார் பொருத்தி, கைகளில் செடிகளை வெட்டும் சுழல் கத்தியையும் இணைத்துள்ளதால் இதன் மூலம் தேவையற்ற களை போன்ற செடிகளை வெட்ட பயன்படுத்துமாறு வடிவமைத்து இருக்கிறார். மேலும் ரோபோவின் முகத்தில் கண்காணிப்பு கேமராவும், செயல்பாட்டை கண்டுபிடிக்க டிஸ்பிளே லைட்டுகளும், தேவையான இடங்களுக்கு நகரும் மோட்டார் சக்கரங்களும் இணைக்கப்பட்டு முற்றிலும் ரிமோட்டால் இயக்கப்படும் நிலையில் வடிவமைத்துள்ளார்.

இந்த ரோபோ மூலம் விவசாய நிலங்களில் ஈரப்பதத்தை கண்டறிந்து தானாகவே தண்ணீர் பாய்ச்சவும், போதுமான தண்ணீர் பாய்ந்தவுடன் தானாகவே அடுத்த பாத்திக்கு தண்ணீர் பாயுமாறு வடிவமைத்துள்ளதாகவும், ரோபோ செய்ய வேண்டிய வேலைகளை கம்யூட்டரில் பதிவு செய்து உத்தரவுகளை பிறப்பித்தால் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்குமாறு உருவாக்கியுள்ளார். மேலும் இதுகுறித்த தொழில் நுட்பங்களை பெங்களூருவில் படித்து தெரிந்து கொண்டு பெரிய அளவில் செய்ய இருப்பதாகவும் மாணவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment