Tuesday, August 4, 2009

6 ஆண்டுகளாக, மகன் கல்லறையில் வசிக்கும் தாய் !


kors.jpg

6 ஆண்டுகளாக, மகன் கல்லறையில் வசிக்கும் தாய்

மகன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக மகனின் கல்லறை அருகிலேயே வசிக்கும் பாசமிகு தாய் திருநெல்வேலி மாவட்ட ஆலங்குளத்தில் இருக்கிறார். மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?” கணவனையும், மகனையும் இழந்து தவிக்கும் ஒரு தாயின் பாசப் போராட்ட கதை இது.

பெயர்: வெள்ளையம்மாள்.

வயது: 68

இடம்: நெல்லை மாவட்டம், ஆலங்குளம்.

எல்லோரையும் போல மகிழ்ச்சியாகத்தான் தொடங்கியது வெள்ளிந்திரியான வெள்ளையம்மாளின் திருமண வாழ்க்கை.

கடந்த 1957-ம் ஆண்டு குத்தாலிங்க நாடார் என்பவரின் கரம் பிடித்தார் வெள்ளையம்மாள். மறு ஆண்டே செல்லத்துரை என்ற அழகான ஆண் மகன் பிறந்தான்.

மகனை பாலூட்டி, சீராட்டி, கொஞ்சி மகிழ்ந்து வளர்த்து வந்த வெள்ளையம்மாளுக்கு அவன் பிறந்த 4-வது மாதமே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

இளம் வயதிலேயே குத்தாலிங்க நாடார் “திடும்” என காலமானார். வெள்ளையம்மாள் வெள்ளைப்புடவை கோலத்தில் விதவையாகிப் போனார்.

அவரது தலையில் விதி எப்படி எழுதப்பட்டிருந்ததோ தெரியவில்லை. மீண்டும் ஒரு சோதனைக்குள்ளானார்.

மகன் செல்லத்துரைக்கு மன நலக்கோளாறு ஏற்பட்டு, வெள்ளையம்மாளுமே மனம் பித்து பிடித்தது போலானார்.

செல்லத்துரை வளர, வளர அம்மாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கெல்லாமோ ஓடிப்போனான். பாவம் வெள்ளையம்மாள். ஊர், ஊராக அவனைத் தேடிக்கண்டு பிடித்து, குணமாக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஊஹநிம்.. எதுவும் பிரயோஜனமில்லை.

காலங்கள் உருண்டோடின. ஒரு வித சுனாமி வாழ்க்கையில் சிக்கித் தவித்த வெள்ளையம்மாளை எதிர்பாராத விதமாக தவிக்க விட்டுவிட்டு செல்லத்துரை கடந்த 2003-ம் ஆண்டு திடீர் என தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனும் தன்னை பரிதவிக்கவிட்டுப் போன அதிர்ச்சியை வெள்ளையம்மாவால் தாங்க முடியவில்லை. அழுது உருண்டு புரண்டார்!.

பெற்று, வளர்த்து, ஆளாக்கிய பாசம் அவரை சுட்டு வறுத்து எடுத்தது. அவருக்கு உலகில் வேறு எதுவும் ஆறுதலாக தெரியவில்லை.

தனது தந்தை வழி, கணவர் வழி சொத்துக்களை விற்றார். ரூ.5 லட்சம் விலை போனது.

தனது மகன் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு அழகான கல்லறையை உருவாக்கினார். அருகிலேயே அவருக்குமாகச் சேர்த்து இன்னொரு கல்லறையையும் தயார் செய்து வைத்திருக்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக வெள்ளையம்மாள் வசிப்பது இந்தக் கல்லறை அருகில்தான்!.

ஒவ்வொரு வெள்ளி, செவ்வாயும் மகனின் கல்லறைக்கு மாலை போட்டு வணங்குகிறார். ஒவ்வொரு நினைவு நாளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்.

வெள்ளையம்மாள் சொல்கிறார், “ என் மகன் கூட நானும் செல்லும் நாள் எப்போது வருமோ?”

“இறந்த பிறகும் தன் மகனை பெரிதுவக்கும் ஒரு பாசமிகு தாய் வெள்ளையம்மாள்!”

No comments:

Post a Comment