Tuesday, August 4, 2009

இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் அதிசய சிறுமி

வலது மற்றும் இடது ஆகிய இரு கைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும், திறமைசாலியாக வளர்ந்து வருகிறாள், இந்த ஏழு வயது சிறுமி. அதிலும் இடது கையால் எழுதும் எழுத்தில், ஆச்சரியப்படும் படியாக தலைகீழாகவும், வேகமாகவும் எழுதுகிறாள். விஜயவாடா நகரைச் சேர்ந்த சேக் ரஜியா, இங்குள்ள ஸ்வர்ண பாரதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி ரஜியாவுக்கு, எல்.கே.ஜி.,யில் சேர்க்கும்போது இடது கையால் எழுதும் பழக்கம் இருந்தது. இடது கையால் எழுதி வருவதால் அனைத்து பழக்க வழக்கமும் அதேபோன்று வந்துவிடும், என்று நினைத்த ஆசிரியர்கள் கடிந்து கொண்டு வலது கையால் எழுதுவதற்கு பழக்கப்படுத்தினர். ஆனால், சிறுமி ரஜியா, இடது கையால் எழுதும் வழக்கத்தை விட்டபாடில்லை. ஆனால், இதில் மர்மம் ஒன்று மறைந்துள்ளது. வலது கையினால் அனைவரையும் போல் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதே எழுத்துக்களை கண்ணாடியில் பார்த்தால் எப்படி தெரியுமோ, அதேபோன்று இடது கையினால் வித்தியாசமாக, வேகமாக எழுதும் பழக்கத்தை, சிறுமி ரஜியா இந்த வயதில் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார். சாதாரண எழுத்துக்கள் மட்டுமல்ல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளையும், இடது கையால் தலைகீழாக எழுதி, சாதனை செய்து வருகிறாள் சிறுமி சேக் ரஜியா.

No comments:

Post a Comment