Tuesday, August 4, 2009

தண்ணீரில் மொபைல் விழுந்தால்...

அண்மையில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் முடிவுற்றபோது கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது பயிற்சி மருத்துவர் ஒருவர் தலையில் கை வைத்தவாறு சோகமாக கட்டிட வராண்டாவில் அமர்ந்திருந்தார். போராட்டம் தான் நல்ல படியாக முடிந்துவிட்டதே; ஏன் கவலை? என்று கேட்டபோது மேலாக அணியும் டாக்டர்களுக்கான கோட் ஒன்றைத் தன் தோழியிடம் பெற்று அணிந்ததாகவும் அது பழகாத கோட் என்பதால் அதில் பாக்கெட்டில் இருந்த மொபைல் தண்ணீர் உள்ள இடத்தைத் தாவுகையில் கீழே இருந்த நீருக்குள் மூழ்கிவிட்டதாகவும் கூறினார். உடனே மொபைல் போனை எடுத்துவிட்டாலும் திரை வெளிறிப்போய் எதுவும் ஒர்க் ஆகலை என்று வருத்தத்துடன் இருந்தார். இது போன்ற சூழ்நிலை யாருக்கும் ஏற்படும். குறிப்பாக புதிய சூழ்நிலை, ஆடை மாற்றல் இருப்பின் அதற்குப் பழக நேரம் ஆகும் என்பதால் மொபைல் போன்கள் விழ வாய்ப்புண்டு. நீரில் விழுந்தால் சேதம் அதிகம் என்பதால் நீர் அருகே, தரையில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம், பாத்ரூம், வாஷ் பேசின் போன்ற இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். சரி, தண்ணீரில் விழுந்துவிட்டால் சென்ன செய்வது என்று பார்ப்போமா!



1. போனை உடனே வெளியே எடுக்கவும்: இதனை நீங்கள் தாமாகவே செய்துவிடுவீர்கள் என்றாலும் சில வேளைகளில் விழுந்த நீரின் தன்மை காரணமாக நீங்கள் தயங்கலாம். எது எப்படி இருந்தாலும் போன் உடனே எடுக்கப்பட வேண்டும். உடனடியாக அதனை உலர்ந்த ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லவும். உங்கள் ஆடைகள் ஈரமானதாக இருந்தால் வேறு துணிகள் மீது அல்லது தாள்கள் மீது வைக்கவும்.


2. பேட்டரி நீக்குக: உடனடியாக போனைத் திறந்து பேட்டரியை நீக்கவும். போனை ஆப் செய்திட வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டாம். பேட்டரியை எடுத்துவிட்டால் அது ஷார்ட் சர்க்யூட் ஆவது தடுக்கப்படும்.


3. சிம் நீக்குக: பத்திரமான இடத்திற்கு வந்துவிட்டீர்களா! சிம் கார்டினையும் நீக்கவும். ஏன் பத்திரமான இடம் என்றால், உங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தில் சிம் கார்டினை எங்காவது மறந்து வைக்கலாம் அல்லது தொலைத்து விடலாம். சிம் கார்டினை ஏன் எடுக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். உங்கள் மொபைல் போனின் சர்க்யூட்டில் சிம் கார்டும் இணைந்த ஒன்றாகும். எனவே பிரச்சினையில் அதிலும் ஷார்ட் சர்க்யூட் தவறு ஏற்படக் கூடாது அல்லவா? மேலும் சிம்மை எடுத்து அதில் உள்ள ஈரத்தினை உலர்த்திப் போக்கிவிட்டால் இன்னொரு போனில் இணைத்துப் பயன் படுத்தத் தொடங்கலாமே.


4. போனை உலர்த்துங்கள்: ஈரமான ரோஜாவாக மாறிவிட்ட உங்கள் மொபைல் போனுக்கு சரியான வைத்தியம் இதுதான். அதில் உள்ள ஈரம் அனைத்தையும் உலரச் செய்திட வேண்டும். அனைத்து ஈரமும் உலர்ந்து விட்டால் எதுவுமே நடக்காதது போல மொபைல் போனை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு மிகவும் எளிமையான வழி போனின் மேல், கீழ் மூடிகளைக் கழற்றி வெறுமையான இடத்தில் அப்படியே உலர வைப்பதுதான்.


பலர் உடனே தாங்கள் பயன்படுத்தும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்துவார்கள். இது மிகவும் தவறு. அதிலிருந்து வரும் வெப்பம் போனை சேதப்படுத்தலாம். சிலர் டேபிள் விளக்கை எரிய வைத்து அந்த சூட்டில் வைத்துவிடுவார்கள். நாம் என்ன கோழி முட்டை� யப் பொரித்து குஞ்சாகவா மாற்றப் போகிறோம். இதுவும் தவறுதான். உங்களிடம் வேக்குவம் கிளீனர் இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இது மொபைல் போனில் உள்ள ஈரப்பதத்தை இழுத்துவிடும். ஹேர் ட்ரையர் எதிர் திசையில் செயல்படும் என்பதால் தவிர்க் கவும். வேக்குவம் கிளீனரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். பின் போனை நல்ல சுத்தமான துணியில் வைத்துவிடவும். இந்த துணி மொபைல் போனிலிருந்து வரும் ஈரத்தினை உறிஞ்சிக் கொள்ளும்.

5. இன்னும் ஈரமா?: ஆம், போன் முழுவதும் இன்னும் ஈரம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். இதனை எப்படித்தான் இழுப்பது. இதற்கு வேண்டியது போனைச் சேதப்படுத்தாமல் ஈரத்தை உறிஞ்சும் ஏதாவது ஒரு பொருளில் போனை வைப்பதுதான். இதற்காக நாம் ஹார்ட்வேர் அல்லது கெமிக்கல் கடைகளுக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் சமைக்காத அரிசி இருக்கிற தல்லவா! அரிசி உள்ள பாத்திரத்தில் உங்கள் போனை அப்படியே வைத்திடுங்கள். இதில் 2 அல்லது 3 மணி நேரம் இருக்க விடுங்கள்.


6. கடைசி உலர்த்தல்: இவ்வளவும் ஆன பின்னர் உங்கள் போனை அப்படியே ஒரு துணியில் சுற்றி ஒரு நாள் வைத்திடுங்கள். பின் அதனை எடுத்து பேட்டரி மற்றும் சிம் கார்டினை பொருத்தி இயக்கிப் பாருங்கள். அநேகமாக நிச்சயமாய் இயங்க ஆரம்பிக்கும். இதன் பின்னரும் திரையில் கோடு கோடாய்த் தெரிகிறதா? சில பட்டன்கள் செயல்படவில் லையா? போன் இயக்கம் தொடங்கவே மறுக்கிறதா? உங்கள் போனுக்கென உள்ள அதிகாரம் பெற்ற சர்வீஸ் இஞ்சினியரிடம் சென்று போனைக் கொடுத்து சரி செய்திடச் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment