Sunday, August 30, 2009

திருடுவதை தொழிலாக கொண்ட கிராமம்: போலீஸ் கலந்துரையாடலில் திடீர் முடிவு


நெல்லை மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிறிய கிராமம் தெற்கு பனவடலி சத்திரம். தற்போது அப்பகுதியில் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 1000க்கும் அதிகமானோர் கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமன சம்பந்தம் கூட அதே கிராமத்திற்குள்ளாகவே இருக்கும்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடிசைகளில்; மட்டுமே வாழ்ந்து வந்த கிராம மக்கள் சிலர் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று சொந்த ஊரில் மாட மாளிகைகள் கட்டியதைக் கண்ட ஊர்மக்கள் அனைவரும் அதே வழியில் வெளி மாநிலமான கேரளாவை நோக்கி பணி நிமித்தம் செல்லத் தொடங்கினர்.

ஆனால் சென்றவர்கள் அங்கு திருட்டுத்தொழிலையே பிரதானமாக செய்து வந்தனர். இது அரசல் புரசலாக தமிழக காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. கேராளாவிலிருந்து நெல்லை மாவட்டத்திற்கு காவல் துறையினர் வந்து அப்பகுதியில் உள்ள பனவடலிசத்திரம் காவல் நிலையத்தினர் உதவியுடன் பலரைக் கைது செய்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் பணமும் கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பலர் கேரள சிறைச்சாலைகளில் உள்ளனர். இதில் பெண்களும் அதிகப்படியாக ஈடுபட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கேரள நீதிமன்றத்திற்கு வழக்குகளுக்காக பலர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள தொலைக்காட்சியில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பனவடலிசத்திரம் திருட்டு கிராமம் என செய்தி வெளியிட்டது. இதனையடுத்து தமிழக போலீஸார் திருட்டு கிராமமான பனவடலிசத்திரம் கிராமத்து மக்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்து போலீஸ் பொதுமக்கள் கலந்தாய்வுக் கூடட்த்திற்கு ஏற்பாடு செய்தனர்.

கூட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், நெல்லை மாவட்ட எஸ்பி அஸ்ராகர்க், சங்கரன்கோவில் டி.எஸ்.பி நடராஜ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊர் மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கூறும் போது தாங்கள் ஒரு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு திருந்தி வாழ சந்தர்ப்பம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அதே சமயத்தில் தவறு செய்தவர்களை தாங்களே முன்வந்து அடையாளம் காட்டி போலீஸாரிடம் இன்னும் 15 தினங்களுக்குள் ஊர்மக்கள் ஒன்று கூடி கமிட்டி அமைத்து ஒப்படைப்பதாகவும் முடிவெடுத்துள்ளனர். இதில் போலீஸார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் மீது உள்ள பொய் வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிக்க உத்திரவாதம் தருமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் இக்கிராமம் திருட்டு கிராமம் என பெயர் பெற்று விட்டதால் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில ஆசிரியர்கள் அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவித்ததையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரிடையாக தலைமையாசிரியரை சந்தித்து பேசுவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன் கூறும்போது, இக்கிராமம் மீது விழுந்துள்ள கரும் புள்ளியினை மாற்றும் நோக்கத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்டத்தின் நோக்கமே திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள் என்பது தான் என அவர் தெரிவித்தார்.தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனை அடைந்தே ஆகவேண்டும் ஆதலால் திருந்தி வருகின்றோம் மன்னித்து விடுங்கள் என மக்கள் கூறுவதை ஏற்க முடியாது. தவறு செய்பவர்கள் அதிக நாள் மறைந்தும் வாழ முடியாது ஆகவே குற்றவாளிகளை ஊர்மக்களே தெரிவித்தால் மற்றவர்கள் நிம்மதியாக வாழ காவல்துறை ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார்.

திருட்டை பிரதானமாக கொண்ட ஒரு கிராமத்தை மனிதாபிமான நோக்கோடு காவல்துறை கையிலெடுத்து மக்களை திருத்த பெரு முயற்சி எடுத்தது நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment