Thursday, August 20, 2009

ஜீவனாம்சம் கேட்டு 80 வயது பாட்டி மனு

சென்னை: ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில், 80 வயது மூதாட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த முனியம்மாள் (80) தாக்கல் செய்த மனு:எனது கணவர் கன்னியப்பன்.



எங்களுக்கு 1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. எங்கள் திருமணத்தின்போது இரண்டு ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.அதில், ஒரு ஏக்கர் நிலத்தை விற்று வீடு கட்டினோம். அங்கு தான் வசித்து வருகிறோம். எனது கணவர் பெயரில் தான் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இளைய மகனும், அவரது குடும்பத்தாரும் எனது கணவருடன் சேர்ந்து, என்னை மோசமாக நடத்துகின்றனர். அடித்து துன்புறுத்துகின்றனர்.



என்னை அடித்து, ஆறு சவரன் நகைகளை எடுத்துக் கொண்டனர்.அவர்களின் கொடுமை தாங்காமல், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தை அணுகினேன். இதனால், எனது கணவர் பயந்து, வீட்டின் கீழ்தளத்திலேயே என்னை தங்க அனுமதித்தார். மேலும், மாதம் 2,000 ரூபாய் செலவுக்காக கொடுத்து வருகிறார்.எங்களது வீட்டில் ஆறு குடியிருப்புகளை வாடகைக்கு விட்டுள்ளனர். ஒரு கடையும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், எனக்கு 2,000 ரூபாய் தான் செலவுக்கு கொடுக்கிறார். இந்தப் பணத்தை வைத்து என்னால் கவுரவமான வாழ்க்கை வாழ முடியவில்லை.எனது கணவர் தான் ரேஷன் கார்டை வைத்துள்ளார். இதனால், எனக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியவில்லை. சமையல் எரிவாயு இணைப்பும் அளிக்கவில்லை. மருத்துவ செலவுக்கே மாதம் 1,500 ரூபாய் தேவைப்படுகிறது.



மீதமுள்ள 500 ரூபாய் எனக்கு போதுமானதாக இல்லை.துணி துவைப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவதற்கும், என்னால் ஒரு வேலைக்காரியை கூட உதவிக்கு வைத்துக்கொள்ள முடியவில்லை. வீட்டின் முதல் தளத்தில் எனது கணவர் வசித்தாலும் எனது உடல்நலனில் அக்கறை காட்டவில்லை. அவர் ஒரு சுயநலவாதி. என்னை புறக்கணித்துவிட்டு, அவர் விரும்பியபடி வாழ்கிறார்.எனது பேத்தியை ஒரு போலீஸ்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். போலீசை நான் அணுகினால், என்னை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். முதியோர் இல்லத்தில் சேருமாறு, எனது கணவர் திட்டுகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எனது கணவர் என்னை கவனித்துக் கொள்ளவில்லை. சரியான சாப்பாடு தரவில்லை.எனவே, மாதந்தோறும் ஜீவனாம்ச தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தருமாறு, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment