Monday, August 3, 2009

ஒரு கோப்பை சோற்றுக்காக தலை குனிந்து நிற்கும் ஈழத்தமிழர் அவலம்

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ. தே. கட்சியின் ஊவா மாகாண சபை வேட்பாளர் கே. வேலாயுதம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும், உயிருக்குயிராய் நேசிக்கும் இந்தியா இன்று வரையிலும் எமது மக்களைப் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. சிறந்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் மலையக மக்களுக்காக எதையுமே செய்யாத இந்தியா தேவையற்ற எத்தனையோ விசயங்களில் இலங்கையில் தலையீடு செய்து வருகின்றது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையை 1947 ஆம் ஆண்டு பறித்தபோது இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பில் இந்தியா இருந்தபோதும் அதை செய்யாததால் இன்று மலையகம் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

எத்தனையோ ஏமாற்றங்கள் வந்தபோதிலும் இந்தியாவை மீண்டும் நம்பிய தமிழ் மக்களை எட்டி உதைக்கும் பாணியிலே நடந்துகொள்கிறது இந்தியா. இதில் வேதனை என்னவெனில் இந்திய மண்ணில் எத்தனையோ பேர் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று தீக்குளித்த போதும் கூட இது குறித்து ஓரக்கண்ணாலாவது இந்திய மத்திய அரசு பார்க்கவில்லை.

இவர்களில் உணர்வுகளையும் நியாயமான ஆவேசங்களையும் தடுத்து நிறுத்தவே முழு ஆவலோடு செயற்பட்டது. காட்டுமிராண்டித் தனத்திற்கு கைகொடுத்த இந்தியா இனியாவது இந்தத் துன்பியல் சம்பவங்களை மறந்துவிட்டு எமக்காக எமது நிம்மதிக்காக செயற்பட வேண்டும்.

எமது மக்கள் ஒன்றும் பாவப்பட்ட ஜென்மங்கள் அல்ல. மலையக மக்கள் எந்தவொரு நிம்மதியுமின்றி வாழ்க்கையென்றால் என்னவென்று கூட அறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மறுபுறம் வடக்கில் அந்த மண்ணில் கௌரவமாகவும் தலை நிமிர்ந்தும் வாழ்ந்த தமிழர்கள் ஒரு கோப்பை சோற்றுக்காக வரிசையில் தலை குனிந்து நிற்கின்றனர். என்ன கொடூரம் இது? இதனையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு வெறும் வைத்திய வசதிகளையும் அற்ப சலுகைகளையும் வழங்கி எம்மை ஏமாற்றிவிடப் பார்க்கிறது இந்தியா.

கடந்த கால சம்பவங்களை குடைந்து குடைந்து பார்க்கையில் முன்னரைவிட இந்தியாவுக்கு எமது மக்களின் விடுதலையில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டிய, இதற்காக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எனவே எங்களுக்கோர் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா முழுமையாக செயற்பட வேண்டும். இந்தத் தீர்வில் மலையக மக்களது பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு மாற்றத்திற்கு முழு பங்களிப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment