Thursday, August 6, 2009

செல்போன்களால் வளரும் இளம் தலைமுறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும்

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே! ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலைமுறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் ஓரிடத்தில் இடத்தின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக பொலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.

மாணவர்களை பொலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் miss call கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன. பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!

நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன? சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:

“சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பாடசாலை மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் உயர்தரம் வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்”.

மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.

1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.

2. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.

No comments:

Post a Comment