Tuesday, August 4, 2009

சுடுகாட்டில் புதைக்க முயன்றபோது கை அசைந்தது : இறந்ததாக கருதப்பட்ட பெண்

சேலம் மாவட்டம் காக்காப்பாளையம் அருகில் உள்ளது கல்பாரப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஜவுளி வியாபாரியான இவருக்கு பொன்னம்மாள் (வயது 45) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு பொன்னம்மாளுக்கு திடீரென உடல்நிலை பாதித்தது. இதனால் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காட்டினர்.
அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதை அறிந்து அதற்கு சிகிச்சை அளித்தனர்.
கடந்த சனிக்கிழமை அவருக்கு உடல் நிலை மீண்டும் பாதித்தது. இங்கு நேற்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் டாக்டர்கள் பொன்னம்மாளின் உடலை பரிசோதனைசெய்து பார்த்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனராம்.
இதனால் அவரது வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பொன்னம்மாளின் உடலை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். பிறகு அவர் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
இங்கு வந்ததும் பொன்னம்மாளின் உடலுக்கு உறவினர்களும், பொதுமக்களும் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரவு அவரது உடலை தூக்கி சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர்.
அங்கு அவரது உடலை புதைக்க குழி தோண்டப்பட்டது. பிறகு அந்த குழியில் பொன்னம்மாளின் உடலை உறவினர்கள் இறக்கினர்.
அப்போது பொன்னம்மாளின் கைகள் அசைந்தது. இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் பொன்னம்மாளின் உடலை குழியில் இருந்து மேலே தூக்கி வந்து வைத்தனர். பிறகு சுடுகாட்டிற்கு ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. இதில் பொன்னம்மாளை ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தனர். இங்கு டாக்டர்களிடம் நடந்த விவரம் கூறினர்.
பின்னர் டாக்டர்கள் பொன்னம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் பொன்னம்மாள் சற்று குணமாகி உள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செத்து விட்டதாக கூறி உயிர் பிழைத்த பொன்னம்மாளை உறவினர்கள் கூட்டம் கூட்டாக வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment