Thursday, August 6, 2009

மாணவிகளுக்கு போதை ஊசி-ஆசிரியர் கைது

திண்டுக்கல்: மாணவிகளுக்கு போதை ஊசி போட்டதாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நவமரத்துப்பட்டியில் உள்ளது முத்துலட்சுமி அம்மாள்-ரெங்கசாமி ரெட்டியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.

இங்கு அமலோற்பவநாதன் என்பவர் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்தாராம்.

8ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் மேஜிக் ஊசி என்று கூறி இவர் போதை ஊசியைப் போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளும் மாணவியருக்கு, தேர்வில் அதிக மதிப்பெண்களையும் வழங்கினாராம்.

இவ்வாறு ஊசி போட்டுக் கொண்ட மாணவி ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்வே அவர் தனது பெற்றோரிடம் ஊசி போட்டுக் கொண்டதை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார்.

அப்போது அமலோற்பவநாதன், நான் யாருக்கும் போதை ஊசி ஏதும் போடவில்லை, அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை தான் தந்தேன் என்றார்.

ஆனாலும் மேற்கொண்டு பிரச்சனை உருவாவதைத் தடுக்க அமலோற்பவநாதனை வேறு பள்ளிக்கு மாற்ற முடிவு செய்து அவரது மனைவி பிரிசில்லாவை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர் பள்ளி நிர்வாகிகள்.

இதற்கிடையே போதை ஊசி விவரம் கிராமம் முழுவதும் பரவவே மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வகுப்பறைகளில் உள்ள மேஜை, நாற்காலி மற்றும் மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து அமலோற்பவநாதனையும் அவரது மனைவியையும் ஒரு வகுப்பறைக்குள் பாதுகாப்பாக வைத்துவிட்டு மக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினார் மாவட்ட எஸ்பி சின்னச்சாமி.

ஆனாலும் ஆத்திரம் அகலாத பொதுமக்கள் அறைக் கதவை உடைத்துக் கொண்டு ஆசிரியரையும் மனைவியையும் தாக்க முயன்றனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து அமலோற்பவநாதனை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்தே மக்கள் அமைதியாயினர்.

மேலும் அமலோற்பவநாதனை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment