Tuesday, August 4, 2009

ஐந்து தலைமுறை கண்ட தோடரின மூதாட்டி

மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமையை கொண்ட தோடரின மக்களில், ஐந்து தலைமுறைகளை கண்டு 100 வயதை கடந்த ரூஜம் என்ற மூதாட்டி அந்த சமூகத்தின் பெண்கள் மத்தியில் மரியாதைக்குரியவராக கருதப்படுகிறார். இம்மாவட்டத்தில் உள்ள தோடரின மந்துகளில் (கிராமங்களில்) பழமையானதாக கருதப்படும், ஊட்டி தாவரவியல் பூங்காவினுள் உள்ள “கார்டன் மந்து’ எனப்படும் தோடரின மக்கள் வாழும் கிராமத்தின் மருமகளான ரூஜம், தற்போது இதன் கிளை மந்தான புதுமந்தில் வாழ்ந்து வருகிறார்.

10 பெண்களும், ஐந்து ஆண்களும் என மொத்தம் 15 பிள்ளைகளை பெற்ற இருவரின் சந்ததிகளில் தற்போது 250 பேர் உள்ளனர். ஐந்து மகன்களும், ஐந்து பெண்களும் இறந்துவிட்ட நிலையில், தனது ஐந்து பெண்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், இவர்களின் பிள்ளைகள் என ஐந்து தலைமுறைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். 100 ஆண்டுகளை கடந்த பின்பும் தற்போதும், அவர் கையால் சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்வதாக, ஊட்டி கார்டன் மந்தில் உள்ள அவரின் பேத்தி சீதா பெருமை பொங்க தெரிவிக்கிறார்.

சீதா கூறியதாவது: எனது பாட்டி ரூஜம், நான் வாழ்ந்து வரும் கிராமத்துக்கு மருமகளாக வந்தவர். அவருக்கு மாகல்பூப், மிச்சபூப், லைடிஸ் பூப், மித்திபூப், ஜானகி, நம்கீஸ் உட்பட 10 பெண்களும், ஐந்து ஆண்களும் பிள்ளைகளாகும். இவர்களின் சந்ததிகள் என எங்கள் குடும்பத்தில் மொத்தம் 250 பேர் உள்ளனர். இவரின் மூத்த மகளான மிச்சாபூப் என்பவருக்கு தற்போது 75 வயதாகிறது. எங்கள் குடும்பத்தின் தற்போதைய வாரிசுகளான உட்டிசின், தர்ஷினி ஆகிய குழந்தைகளுக்கு தலா ஒரு வயதாகிறது. எனது மகள் பாரதி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவமானால் அந்த குழந்தைதான் புதிய சந்ததியாக இருக்கும். எங்கள் பாட்டி தோடரின சமுதாயத்தின் கலாசார, பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்ந்துவரும் மூத்த பெண்மணியாக கருதப்படுகிறார்.

எங்கள் கிராமத்தின் கிளை கிராமமான புதுமந்து என்ற பகுதியில் வாழ்ந்து வரும் அவர், தற்போதும் அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கெடுத்து ஆசி வழங்குவது எங்களுக்கு பெருமையான விஷயமாக உள்ளது. எங்களின் சமுதாயத்தில் அவரை போன்ற பெரியவர்களின் ஆசிகளால் தான் ஆதிவாசிகளான நாங்கள் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு, சீதா கூறினார்

No comments:

Post a Comment