Friday, August 7, 2009

தூத்துக்குடி-காணாமல் போவோர் அதிகரிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 110 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 77 பேர் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.

தூத்துக்குடியில் சமீபகாலமாக ஆட்கள் மாயமாவது அதிகரித்துள்ளது. ஆண்களில் பெரும்பாலும் முதியவர்கள் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு அதன் விளைவாகவும், சிலர் கடன் தொல்லை காரணமாகவும் மாயமாகி வருகின்றனர். மாணவர்களோ பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் திட்டியதால் வீட்டிலிருந்து பறந்து விடுகின்றனர்.

பெண்களை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்பப் பிரச்சனை காரணமாகவே வீடடை விட்டு வெளியே செல்வதாக தெரிய வந்துள்ளது. இளம் பெண்கள் பலர் காதல் பிரச்சனை காரணமாக மாயமாகி வருகின்றனர்.

காணாமல் போனவர்களில் பலர் முதியவர்கள் என்பதால் அவர்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்யாமல் விட்டு விடும் நிலையும் இம்மாவட்டத்தில் அதிகம் உள்ளது.

இந்த மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 110 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஆண்கள் 29 பேர், பெண்கள் 53 பேர், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 18 பேர், மற்றும் 10 சிறுமிகள் அடங்குவர். இவர்களில் 42 பெண்களும், 10 ஆண்களும், 14 சிறுவர்களும், 9 சிறுமிகள் உள்பட 77 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 12 பெண்களும், 19 ஆண்களும், இரண்டு சிறுவர்களும், 1 சிறுமியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment