Monday, August 17, 2009

யார் இந்த அமீர் ஹம்சா

பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.

பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.

1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.

23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*

23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா.

தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?

(* அமீர் ஹம்சா, ‘நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்’ , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)

No comments:

Post a Comment