Friday, August 28, 2009

நோயாளிகள் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்கள்

கின்னஸ் சாதனைக்காக சில தனிப்பட்ட நபர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிச்சலான செயல்களில் ஈடுபட முயற்சிப்பதும் அதில் வெற்றி பெறுவதும் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும்.

ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கின்னஸ் சாதனைக்காக நோயாளிகளின் உயிருடன் விளையாடி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அரசு ரா
ஜாஜி மருத்துவமனை உள்ளது. இங்கு மூன்றரை மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் அறுவை சிகிச்சைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைக்குமாறு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளிடம் இருந்து எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்க முடியாது என்றும் இது கின்னஸ் அல்லது வேறு எந்த சாதனை புத்தகத்திலும் இடம்பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படமாட்ட
து என்றும் சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தான் தங்களது முக்கிய குறிக்கோள் என்றும் நோயாளிகளின் உயிருடன் விளையாடும் எந்த ஒரு செயலையும் அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜாஜி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், தன்னுடன் சேர்ந்து 3 டாக்டர்கள் மூன்றரை மணி நேரத்தில் 14 அறுவை சிகிச்சைகள் செய்ததாக கூறியுள்ளார். ஆபரேஷன் தியேட்டருக்குள் 4 பேரை படுக்க வைத்து நோயாளியின் உடலில் இருந்து தாம் கட்டியை அகற்றியதாகவும், தனது உதவியாளராக இருந்த மருத்துவர் தையல் போட்டார் என்றும், 3 பேருக்கு முடித்துவிட்டு தாம் 4வது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய போகும்போது முதல் நோயாளி வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் நபர் வார்டுக்கு அனுப்பும் போது அடுத்த நபர் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.அரசு மருத்துவமனையிலேயே

அரசு மருத்துவர்களின் இந்தச் செயல் பல்வேறு மருத்துவ அமைப்புகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது மருத்துவர்கள் தங்களது உறுதிமொழியை மீறிய செயல் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பொதுவாக தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் வர்த்தக நோக்கத்துடன் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு மருத்துவமனையிலேயே இப்படி ஒரே நேரத்தில் ஒரே மருத்துவ குழு பலருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது அங்கீகரிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளும் இதனைப் பின்பற்ற தொடங்கிவிடும் அபாயம் உள்ளது என்றும், இது நோயாளிகளின் உயிருடன் விளையாடுவது போலாகிவிடும் என்றும் மருத்துவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்று விவசாயத்தில் சொல்லப்படுவது வழக்கம். ஒரே நேரத்தில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைவிட ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்வதுதான் மருத்துவ தொழிலில் முக்கியம்.

இதனை உணராமல் தனிப்பட்ட சாதனைக்காக இந்த முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

No comments:

Post a Comment