Wednesday, October 21, 2009

தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் கடலில் மூழ்குமா? வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!

மாலத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றில் 90க்கும் மேற்பட்ட தீவுகள் கடல் மட்டத்தைவிட அதிகபட்சமாக ஒரு மீட்டர் மட்டுமே உயரமாக இருக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டத்தின் அளவு உயர்ந்துகொண்டே வருவதால் 2100ம் ஆண்டுக்குள் இந்த நாடு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கடியில் நடந்தது.

தூத்துக்குடி நகரிலும் பல பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வாக உள்ளன. இதனால் மாலத்தீவு போன்ற ஒரு நிலை தூத்துக்குடிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிய தூத்துக்குடி ..சி. கல்லூரி ஜியாலஜி பேராசிரியர்கள் டாக்டர் திருஞான சம்பந்தம், டாக்டர் உடையனபிள்ளை, டாக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்தோம்.

அவர்கள் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடலில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் பவளப்பாறைகள், சல்லிகள் போன்றவைகள் பெருமளவு திருடப்பட்டதால் தற்போது 2 தீவுக்ள முற்றிலுமாக கடலில் மூழ்கிவிட்டன. தூத்துக்குடி அருகே உள்ள விலாங்கு சல்லி என்ற தீவும், கீழக்கரைக்கு அருகே உள்ள பூவரசன்பட்டி என்ற தீவும் தற்போது அடையாளம் தெரியாத வண்ணம் கடலில் மூழ்கியுள்ளது.

தூத்துக்குடி கடலோரப் பகுதிகள் கடல் மட்டத்தைவிட சுமார் 2மீ உயரமானவை. அதே நேரம் தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட், ..சி. கல்லூரி போன்ற பகுதிகள் கடல் மட்டத்தைவிட 2மீ தாழ்வாக இருப்பதாக ஜிபிஎஸ் (GPS) கருவிகள் காட்டுகின்றன.

கடலோர பகுதிகள் ஒரு அரண்போல இருந்து கடல் நீர் தூத்துக்குடி நகருக்குள் புகாதவாறு காத்துக்கொண்டிருக்கின்றன. கடலோரப் பகுதியில் மணல் அள்ளுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் இருந்தால் கடல் நீர் நகருக்குள் புகுந்துவிடும்.

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருவதால் தூத்துக்குடி கடலோரங்களில் அரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோரங்களில் சதுப்பு நில காடுகள் உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்துதல், தூண்டில் பாலங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் கடல் அரிப்பை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோழித் தீவனம் மற்றும் உப்புப் பாத்திகள் அமைப்பதற்காக பெருமளவில் கடல் மண் தூத்துக்குடியின் வடக்கு கடலோரங்களில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment