Saturday, September 5, 2009

பாம்பு கடித்து இறந்தவரின் வீட்டிற்கு வந்த சிறுமி பாம்பு கடித்து பரிதாப பலி

தென்காசியில் பாம்பு கடித்து இறந்த பெண்ணின் விசேஷத்திற்கு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சிறுமியும் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.

தென்காசி ஆசாத்நகரை சேர்ந்தவர் மூக்கன் மனைவி திருமலை (45). இவரை கடந்த மாதம் 30ம் தேதி பாம்பு கடித்து விட்டது. அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தடுப்பூசி போடப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருமலையின் விசேஷத்திற்கு அவரது உறவினர் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராஜிவ் நகரை சேர்ந்த ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். விசேஷம் முடிந்ததும் நேற்று இரவு ஸ்டாலின் மகள் ஹரிணி (6) வீட்டில் தூங்கியுள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் ஹரிணியை பாம்பு கடித்துள்ளது. இதனால் அச்சிறுமி அலறி அடித்துக் கொண்டு விழித்தெழுந்தார். அவரது சத்தத்தை கேட்ட உறவினர்கள் லைட் வெளிச்சத்தில் பார்த்த போது அப்பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டனர்.

அவர்கள் அந்த பாம்பை அடித்து கொன்று தீ வைத்து எரித்தனர்.பாம்பு கடித்த சிறுமி ஹரிணி தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுமி ஹரிணி வாயில் நுரை வந்துள்ளது. இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அங்கிருந்த நர்சிடம் டாக்டரை உடனே வரவழைத்து சிகிச்சை அளிக்கும் படி கூறியுள்ளனர்.

ஆனால் நர்ஸ் உடனே டாக்டரை அழைத்து வரவில்லையாம். இதனால் சிறிது நேரத்தில் சிறுமி ஹரிணி பரிதாபமாக இறந்தார்.இதனை கண்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். டாக்டரை உரிய நேரத்தில் அழைத்து சிகிச்சை அளித்திருந்தால் ஹரிணி இறந்திருக்க மாட்டார் என்று கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பு கடித்து இறந்த பெண்ணின் விசேஷத்திற்கு வந்த சிறுமியும் பாம்பு கடித்து இறந்தது தென்காசி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment