Saturday, September 5, 2009

நெல்லையில் பூலித்தேவன் 294வது பிறந்தநாள் விழா: மனோரமா, செந்தில் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் நெல்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் 294வது பிறந்தநாள் விழாவில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், நடிகை மனோரமா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப களதர்த்தர்களில் ஒருவர்தான் பூலித்தேவன். விழாவுக்கு நடராஜன் தலைமை வகித்தார். நடிகை மனோரமா, நடிகர் செந்தில், இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூலித்தேவர் அறக்கட்டளை பொருளாளர் வேலாயுதசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நடிகை மனோரமா பேசுகையில், இளைஞர்கள் முதலில் பெற்றோர், படிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை காதலிக்க வேண்டும். ஒரு அந்தஸ்துக்கு வந்த பின்னர் பெண்களை காதலியுங்கள். 20 வயதில் காதலித்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள். மணமகன், மணமகள் எய்ட்ஸ் சோதனைக்கு பின் திருமணம் செய்து கொள்வதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும். இனி நான் நடிக்கும் திரைப்படங்களில் எனது பெயர் வீர மறத்தி மனோரமா என வெளிவரும் என்றார்.
நடராஜன் பேசுகையில், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் ஆட்சியில் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் சிற்பங்களை மறைக்க முடியாதோ அதேபோல பூலித்தேவர் வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. வரலாற்றில் நமது பங்கு என்ன என்று தெரியவில்லை. அதனால்தான் நாம் மற்றவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து வருகிறோம். எனவே உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். அவர்கள் கல்வி கற்றால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளை வீரம் உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment