Sunday, September 20, 2009

உள்ளம் உறுதியாக இருந்தால் வயது ஒரு பாரமில்லை' : 55 வயதில் சைக்கிளில் பால் வியாபாரம் செய்யும் பெண்

பொள்ளாச்சி : கொஞ்ச தூரம் நடந்தாலே, கால் வலிக்குது, கை வலிக்குது என்று சிணுங்கம் மக்கள் மத்தியில், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சைக்கிள் மிதித்து, வீடு வீடாக பால் விற்பனை செய்து உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார், பொள்ளாச்சியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்.

இவரது வருகைக்காக வீட்டு வாசலில் கைக்குழந்தைகளுடன் பால் வாங்குவதற்காக காத்திருக்கின்றனர், பெண்கள். தலைமுடி நரைத்தாலும், 55 வயதிலும் சைக்கிள் பெடலை மிதித்தபடி பால்கேனுடன் செல்கிறார், இவர்.முகத்தில் களைப்பில்லை, ஊற்றும் பாலிலும் "கலப்படம்' இல்லை. பால் போல் வெள்ளை மனசு. அதனால் மக்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. "20 ஆண்டுகளுக்கு மேலாக இவரிடம் தான் பால் வாங்குறோம்' என்கின்றனர் பால் வாங்கும் பெண்கள்.



யார் இந்த பால்காரி என்று விசாரிக்காதவர்கள் இல்லை; உண்மை தான், வயதால் தளர்ந்தாலும், மன உறுதியால் தளராமல் சைக்கிள் மிதித்து உழைக்கிறார் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி, ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள். இவரது கணவர் ஆறுமுகம்; பொள்ளாச்சியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். வெள்ளையம்மாள் காலை 4.00 மணிக்கு பால் கறவையை துவங்கி, 8.30 மணி வரை பால் வியாபாரம் செய்கிறார். அதன்பின், வீட்டு வேலைக்கு நேரத்தை ஒதுக்குகிறார். மதியம் 2.30 மணிக்கு மாலை நேர பால் கறவையை துவங்கி, மாலை 6.00 மணிக்கு பால் வியாபாரத்தை நிறைவு செய்கிறார்.



அவரிடம் பேசியபோது...எங்க வீட்டுக்காரர் வேலைக்கு போய் சம்பாதித்ததை வைத்து குடும்பம் நடத்த முடியலை. வீட்டுச் செலவை சமாளிக்க மாடு வளர்த்தேன். வீட்டில் பால் கறந்து 30 வருஷத்துக்கு முன்னாடி பால் வியாபாரம் செஞ்சேன். எனக்கு படிப்பறிவு அதிகம் இல்லீங்க; அதனால பால் வியாபாரத்துல கவனம் செலுத்தினேன்.இரண்டு மாடுகளில் பால் கறந்து விற்றது, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சது. வீடுகளில் பசு வளர்ப்பவர்கள் என்னை பால் கறக்க கூப்பிட்டாங்க. இதனால, 10க்கு மேற்பட்ட இடத்துக்கு சென்று மாடுகளில் பால் கறந்து வியாபாரம் செஞ்சேன்.பொள்ளாச்சியில், தமிழ்மணி நகர், சேரன்நகர், இந்திராநகர், நல்லப்பாநகர், டி,கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம் பகுதியில தினமும் காலையிலேயும், சாயங்காலமும் 10 கி.மீ., நடந்து சென்று வீடுகளுக்கு பால் ஊத்தினேன்.நடந்து சென்றால் உடல் வலி ஏற்பட்டு சிரமமானதால், சைக்கிள் ஓட்டிப் பழகினேன்.



10 வருஷமா சைக்கிளில் பால் கேன்களை தொங்கவிட்டு ஓட்டீட்டு போறேன். மேடான ரோட்டுல சைக்கிள் ஓட்ட முடியலைன்னா, இறங்கி தள்ளிட்டு போவேன். வாடிக்கையாக 50 வீடுகளுக்கு பால் சப்ளை செய்றேன். தினமும் 20 கி.மீ., சைக்கிள் ஓட்டி 60 லிட்டர் பால் விக்கறேன். இந்த தொழில்ல தினமும் 100 ரூபாய் வருமானம் கிடைக்குது. உடம்பு சரியில்லைனாலும் பால் வித்துட்டுத் தான் ரெஸ்ட் எடுப்பேன். மழை, வெயில் பார்க்காமல் சரியான நேரத்துக்கு போயிடுவேன்.என்னோட மகன் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தான். வேலை நிரந்தரமாகாததால் அவனும் பால் வியாபாரத்திற்கு வந்துட்டான். இத்தனை வருஷமா பால் விற்றது போதும், இனி ஓய்வு எடும்மான்னு, மகன் சொல்றான். அவனுக்கு இன்னும் ஒரு வாழ்க்கை அமையல. அதனால் பால் தொழிலை விட முடியலை.



மொபட் ஓட்டப் பழக்கிட்டேன். மொபட்டில் பால் வியாபாரம் செஞ்சால், வருமானத்தில் பாதியை பெட்ரோலுக்கு கொடுக்கணும். அதனால, சைக்கிளில் சுற்றியே பால் வியாபாரம் செய்யறேன். வங்கியில லோன் கிடைச்சா பால் தொழிலை விரிவுபடுத்தி, சைக்கிளுக்கு பதிலாக மொபட் வாங்கிடுவேன்...தன்னம்பிக்கையுடன் தளராமல் கூறுகிறார் வெள்ளையம்மாள்.பால் வியாபாரத்தில், ஆண்கள் மட்டுமே கொடிகட்டி பறக்கும் நிலையில், வயதானாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் சைக்கிள் மிதித்து உழைக்கும் வெள்ளையம்மாள், பெண்ணினத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கே முன்னுதாரணம்.

No comments:

Post a Comment