Wednesday, December 2, 2009

குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் இயங்கின.

குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் வழக்கம் போல் இன்றும் இயங்கின. அரசின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
புலி வருது... பூதம் வருது... என்று பயமுறுத்தி கடைசியாக பூனை வந்தால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் சைனா செல்போன் வைத்திருப்பவர் களின் மனதில். கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் பாதுகாப்பு கருதி அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் தடை செய்யப்படும் இணைப்புகள் துண்டிக்கப் படும்! அவற்றில் பேச முடியாது! அதை பயன்படுத்து வது சட்ட விரோதம்! அதற்கான சட்டம் விரைவில் வரப்போகிறது என்ற பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. பிரபல நிறுவனங்களின் விருப்பப்படியே மலிவான விலைக்கு மக்களின் கரங்களில் தவழ்ந்த சைனா, கொரியன் போன்ற செல்போன்களை தடை செய்வதில் வேகமும் விறுவிறுப்பும் காட்டப்பட்டது. டிசம்பர்-1 (இன்று) முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன் செயல் இழக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட விசேஷ சாப்ட்வேர் பல்வேறு தனியார் செல்போன் சேவை நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கு வழங்கி அமல்படுத்த கேட்டு கொண்டனர். அதன்படி கடந்த 2 நாட்களாக செல்போன் வைத்திருந்த அனைவரும் தங்கள் வைத்திருக்கும் செல்போனுக்கு அடையாள குறியீட்டு எண் உள்ளதா? அது ஒரிஜினல் தானா? என்பதை சரி பார்ப்பதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி சோதித்து பார்த்தனர். சிலருக்கு “சக்சஸ்” என்ற மகிழ்ச்சியும், “நாட்வேலிடு” என்ற தகவலும் முன்னுக்கு பின் முரணாக வந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இதற்கிடையே திருவிழா கூட்டத்தில் குழந்தைகளிடம் நகை பறிப்பது போல் சிலர் எங்களிடம் ரூ.200 பணம் கட்டினால் ஐ.எம்.இ.ஐ. நம்பர் பதிவு செய்து தருவோம் என்று கடை விரித்தார்கள். கடல் மணலை கூட கும்பலாக நின்று வாங்கினால் “எனக்கு ஒரு பொட்டலம் கொடு” என்று கேட்டு வாங்குவது போல அடையாள குறியீட்டு எண் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட கடைகளின் முன்பு நீண்ட வரிசை. அனைவரிடமும் ரூ.200 வசூலித்தனர். ஒரே பதில், “நாளை காலையில் இருந்து உங்கள் செல்போன் செயல் இழக்காது. அடையாள குறியீட்டு எண் கிடைத்து விடும்” என்று அனுப்பி வைத்தனர். அடையாள குறியீட்டு எண்ணை சரி பார்ப்பதற்கு என்ற எஸ்.எம்.எஸ். தகவலை பரிமாறியே ஒரு மெசேஜுக்கு, ரூ.3 வீதம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் செல்போன் சேவை நிறுவனங்களும் தாராளமாக சுருட்டின! அரசு அறிவித்தப்படி நேற்று இரவு 12 மணி முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் செயல் இழக்கவில்லை. வழக்கம் போல் இயங்கின. எந்த ஒரு செல்போனில் இருந்தும் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போனுக்கும் அந்த செல்போனில் இருந்து மற்ற பிரபல நிறுவனங்களின் போனுக்கும் பேச முடிந்தது. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பு டுபாக்கூர் ஆனது. சென்னையில் மட்டும் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் சுமார் 16 1/2 லட்சம் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. எனவே செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழக்க விருப்பமில்லாமலே இருந்தன. இந்தியா முழுவ தும் 2 1/2 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை தடை செய்ய முடியாததற்கு செல்போன் சேவை நிறுவனங்களில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தனியார் செல்போன் சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறும் போது:- அரசுக்கு முறையாக வரி கட்டி இயங்கும் சில பிரபல செல்போன் நிறுவனங்கள் ரூ.10 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்தும் மாடல் செல்போனை சைனா மற்றும் கொரியன் செல்போனில் ரூ.1,500-க்கு வாங்க முடிகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அடையாள குறியீட்டு எண்ணை பார்த்து செல்போனை வாங்குவதில்லை. விலையை மட்டும் பார்க்கிறார்கள். ஐ.எம்.இ.ஐ. எண்கள் இல்லாததால் இதன் செயல் பாட்டை கண்காணிக்க முடியாது. எனவே இத்தகைய செல்போன்கள் தீவிரவாதிகள் பயன்படுத்த ஏதுவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும், அவற்றை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக விருப்பம் காட்டினர். அரசின் தடை குறித்த அறிவிப்பால் அவர்கள் அதிர்ந்து போயிருந்தனர். ஆனால் தடை செய்ய பயன் படுத்தப்படும் சாப்ட்வேர் தொழில் நுட்பம் தோல்வி அடைந்து விட்டது. அதன் காரணமாக திட்டமிட்டப்படி தடையை இன்று அமல்படுத்த முடியவில்லை. இது தற்காலிக சந்தோசம் தான். தடை செய் வதில் உடன்பாடில்லை. என்றாலும் நாங்கள் அரசு அறிவுறுத்திய சாப்ட்வேரை செயல்படுத்தி விட்டோம். அது செயல் இழந்து விட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். வழக்கம்போல பி.எஸ்.என்.எல். அதிகாரியோ, அரசின் சாப்ட்வேர் செயல் பட தொடங்கி விட்டது. அடையாள குறியீட்டு எண் இல்லாத அனைத்து செல்போன்களும் குறிப்பாக “செல்ஒன்” சிம்கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று உறுதியாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி ஏதுவும் நடக்கவில்லை. “செல் ஒன்” சிம் கார்டுகள் போடப்பட்ட அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் கூட வழக்கம்போல செயல்படுகிறது என்பது தான் உண்மை.

No comments:

Post a Comment